தெற்கு ரயில்வே மண்டலத்தில் ரயில்கள், நிலையங்களில் பயணிகளிடமிருந்து திருடப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்புள்ள 130 கைப்பேசிகள் நவீன செயலியால் (சிஇஐஆர்) மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவு ஐ.ஜி. கே.அருள்ஜோதி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ரயில் பயணிகளிடம் திருடப்பட்ட கைப்பேசிகளைக் கண்டறிய ரயில்வே பாதுகாப்பு பிரிவின் சிஇஐஆர் செயலி பெறப்பட்டுள்ளது.
இது தேசிய அளவில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான புகாரில் திருடுபோன கைப்பேசி எண் மட்டும் இருந்தால் போதும். அதன்மூலம் கைப்பேசியை கண்டறியலாம்.
கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் 27- ஆம் தேதி வரையில் தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படை பிரிவில் கைப்பேசிகள் திருடு போனதாக புதிய செயலி மூலம் 460 பேர் புகார் அளித்திருந்தனர். அவர்களது கைப்பேசிகள் திருடப்பட்டு விற்கப்பட்டும் உள்ளன. புதிய செயலி மூலம் திருடப்பட்ட கைப்பேசிகள் செயல்பாட்டை ரயில்வே பாதுகாப்புப் படையினர் முடக்கினர். அந்தக் கைப்பேசிகளை ரயில்வே பாதுகாப்புப் படை மூலமே மீண்டும் செயல்படுத்த முடியும். அதனால், அதை விலைக்கு வாங்கியவர்கள், திரும்ப ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், புதிய சிம் கார்டு பயன்படுத்தினால், சம்பந்தப்பட்டவர் முகவரியுடன் குறுந்தகவல் செயலிக்கு வந்துவிடும். அதன்படி தற்போது வரை ரூ.30 லட்சம் மதிப்புள்ள 130 கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட 130 கைப்பேசிகளில் 100 கைபேசிகள் சென்னை மாநகர் பகுதியைச் சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றார்.
கைப்பேசிகள் ஒப்படைப்பு: மங்களூரு, மயிலாடுதுறை ஆகிய ரயில்களில் விலை உயர்ந்த கைப்பேசிகள் திருடுபோன நிலையில் புதிய செயலி உதவியுடன் அவை மீட்கப்பட்டு, அவற்றுக்குரியவர்களான மேடவாக்கம் எஸ்.அன்புகனகராஜ், சென்னை அனிஷா என்பவரின் சகோதரர் மணி ஆகியோரிடம் ஐ.ஜி. கே.அருள்ஜோதி செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தார்.
இதில், அன்புகனகராஜ் வைத்திருந்த பையில் விலை உயர்ந்த கைக்கடிகாரம், பணம் உள்ளிட்டவற்றுடன் கைப்பேசியும் திருடுபோனது. இதில் கைப்பேசி மட்டுமே மீட்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.