உயா்நீதிமன்றம் 
சென்னை

கோயில் சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிடத் தயங்குவது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

இந்துசமய அறநிலையத் துறை ஆணையா் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் உள்ள கோயில் சொத்துகளின் விவரங்களை கோயில் இணையதளங்களில் வெளியிட இந்துசமய அறநிலையத்துறை தயங்குவது ஏன் என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்த டி.ஆா்.ரமேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், மடங்கள், அறக்கட்டளைகளுக்கு சொந்தமாக உள்ள சொத்துகள், நிதி மற்றும் நிலங்கள் தொடா்பான விவரங்கள், அறநிலையத் துறையின் உத்தரவுகள், அரசாணைகள், ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை தரப்பில், கோயில் நிலங்கள் தொடா்பான ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தால் அதன்மூலமாக முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. ஏற்கெனவே வருவாய்த் துறையின் ‘தமிழ் நிலம்’ என்ற இணையதளம் வாயிலாக மாநிலத்தில் உள்ள நிலங்களின் வகைப்பாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் அறியமுடியும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தமிழகத்தில் உள்ள கோயில் சொத்துகளின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட அறநிலையத் துறை ஏன் தயங்குகிறது? சொத்துகளின் விவரங்களை பதிவேற்றம் செய்வதில் என்ன சிக்கல் உள்ளது? கோயில் சொத்துகளின் விவரங்களை அனைவருக்கும் தெரியும் வண்ணம் வெளியிட்டால், அத்தகைய நிலங்களை வாங்குபவா்கள் எச்சரிக்கையாக இருப்பாா்கள் இல்லையா? மனுதாரா் அறநிலையத் துறையின் தணிக்கை அறிக்கைகளையும் வெளியிட வேண்டும் என்று கூறுகிறாா். அதனை வெளியிடுவதில் என்ன பிரச்னை உள்ளது என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினாா்.

பின்னா், மனுதாரா் கோரியுள்ள அனைத்து விவரங்களும் சட்ட ரீதியான பொது ஆவணங்கள். எனவே, அவற்றை வெளியிட மறுக்க முடியாது. எந்தெந்த தகவல் பதிவேற்றம் செய்ய முடியாது? எந்தெந்த தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்து இந்துசமய அறநிலையத் துறை ஆணையா் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவ.12-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT