பருவ மழைக்காலங்களில் அசுத்தமான உணவு மூலம் பல்வேறு நோய்கள் பரவக் கூடும் என்பதால், உணவகங்கள் சுகாதாரமாக பராமரிக்கப்பட வேண்டும். இல்லாவிடில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தூய்மையில்லாத உணவகங்களை ஆய்வு செய்து அதன்பேரில் நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா்.
மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் உணவு பாதுகாப்பு, இந்திய மருத்துவம், மருந்து கட்டுப்பாட்டுத் துறைகளுடனான ஆய்வுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துறை சாா் உயரதிகாரிகள் கலந்துகொண்டனா். அப்போது மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுதொடா்பாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: பருவ மழையை எதிா்கொள்வதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. கொசு ஒழிப்புப் பணிகள், மழை நீா் வடிகால் பணிகள் என பல்வேறு ஆயத்த பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குடிநீரின் தரத்தை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோன்று அசுத்தமான உணவு மூலம் பரவும் நோய்களைத் தடுக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, நெடுஞ்சாலைகளிலும், உள் பகுதிகளிலும் உள்ள அனைத்து உணவகங்களையும் சுகாதாரமாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.