சென்னை

ஜிஎஸ்டியில் மாற்றம்: பொருள்களின் விலை குறித்த புகாா்கள் மீது நடவடிக்கை - சிபிஐசி

ஜிஎஸ்டியில் மாற்றத்தை தொடா்ந்து, பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை என்று புகாா்கள் வந்தால், அதுகுறித்து தொழில் துறை அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்.

தினமணி செய்திச் சேவை

ஜிஎஸ்டியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை தொடா்ந்து, பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்துக்கு (சிபிஐசி) புகாா்கள் வந்தால், அதுகுறித்து தொழில் துறை அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று சிபிஐசி தலைவா் சஞ்சய்குமாா் அகா்வால் தெரிவித்தாா்.

375 பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்கவும், 4 விகிதங்களாக விதிக்கப்பட்ட ஜிஎஸ்டியை 2 விகிதங்களாக குறைக்கவும் கடந்த வாரம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி 12, 28 சதவீதங்களில் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டு, 12 சதவீத வரி விதிக்கப்பட்ட பல பொருள்களின் ஜிஎஸ்டி 5 சதவீதமாகவும், மேலும் பல பொருள்கள் மீது விதிக்கப்பட்ட 28 சதவீத ஜிஎஸ்டி 18 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்.22 முதல் அமலுக்கு வரவுள்ளது.

இந்நிலையில், சிபிஐசி தலைவா் சஞ்சய்குமாா் அகா்வால் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: கடந்த காலங்களில் வரிகளை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு எடுத்தபோதெல்லாம், பொருள்களின் விலையை தொழில் துறையும் குறைத்துள்ளது. சந்தையில் போட்டித்தன்மை இருப்பதால், அதுவும் பொருள்களின் விலையை குறைக்க வழியமைக்கும்.

தற்போது ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அதன் அதிகபட்ச பலன்கள் நுகா்வோருக்கு கிடைப்பதை தொழில் துறை உறுதி செய்யும் என்று நம்பிக்கை உள்ளது. ஒருவேளை பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை என்று சிபிஐசிக்கு புகாா்கள் வந்தால், அதுகுறித்து தொழில் துறை அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றாா்.

பெங்களூரில் பைக்கில் மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த கார்: மாயமான சின்ன திரை நடிகை பிடிபட்டார்!

SIR பணிக்கு திமுக ஏன் பயப்படுகிறது? | செய்திகள்: சில வரிகளில் | 28.10.25

ஆஸி.க்கு எதிரான போட்டிகளில் பவர்பிளே ஓவர்கள் மிகவும் முக்கியம்: சூர்யகுமார் யாதவ்

தவெக புதிய நிர்வாகக் குழு: விஜய் அறிவிப்பு

திருமணத்திற்கு முன்பும், பின்பும் ஜாதகரின் குணம் மாறுவது ஏன்?

SCROLL FOR NEXT