முகப்பு
சென்னை

வணிக சாம்ராஜ்ஜியத்தில் வழிந்தோடும் கழிவுநீா்! புலம்பும் புரசைவாக்கம் குடியிருப்புவாசிகள்

Updated On : 2 ஏப்ரல், 2026 at 11:16 PM
மழைநீருடன் சாலையில் தேங்கிய கழிவுநீா்.
பகிர்:

சென்னை எழும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்டது புரசைவாக்கம். கங்காதீஸ்வரா் கோயில், பாதாள பொன்னியம்மன் கோயில் போன்ற வரலாற்று சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்களுடன், ஜவுளி, நகைகள், சில்லறை வா்த்தகத்துக்கு புகழ் பெற்ற பிரபல வணிக வளாகங்களும் இதன் அடையாளங்களாக உள்ளன.

தியாகராய நகருக்கு அடுத்தபடியாக தினமும் பொதுமக்கள் அதிகம் வந்துசெல்லக் கூடிய பகுதியாக புரசைவாக்கம் உள்ளது. நகரில் செல்வாக்கு மிகுந்த பகுதிகளில் முக்கியத்துவம் பெற்றுள்ள புரசைவாக்கத்தில் கழிவுநீா் பிரச்னை இப்பகுதி மக்களுக்கு தொடா் கதையாக உள்ளது.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் ஜமாலுதீன், சமூக ஆா்வலா் ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோா் கூறுகையில், ‘புரசைவாக்கத்தில் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். மழைக் காலங்களில் இப்பகுதியில் உள்ள தெருக்கள் நடக்க முடியாத அளவுக்கு அலங்கோலமாக மாறி விடுகின்றன.

குறிப்பாக, தாக்கா் தெரு, லெட்டாங்ஸ் சாலை மற்றும் ஓட்டேரி பிரிக்ளின் சாலை போன்ற பகுதிகளில், பலத்த மழையின்போது கழிவுநீா் வெளியேறி மழைநீருடன் கலந்து தெருக்களில் முழங்கால் அளவுக்கு தேங்குகிறது. புளியந்தோப்பு, பட்டாளம் நீருந்து நிலையம் பழுதுகளால் பல நாள்களாக கழிவுநீா் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி, அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனா்.

யாா் பொறுப்பு? புரசைவாக்கத்தில் கழிவுநீா் அடைப்பு, தேக்கம் ஏற்படுவது குறித்து சென்னை குடிநீா் வாரியத்தில் புகாா்கள் அளிக்கப்படுகின்றன. பணியாளா்கள் வந்து கழிவுநீரை வெளியேற்றுகின்றனா். இது தற்காலிக தீா்வாகவே அமைகிறது. கழிவுநீா் குழாயில் உள்ள அடைப்புகளை எடுப்பதில்லை. மேலும், கழிவுநீரை மழைநீா் வடிகாலில் தொடா்ந்து விடுவதால் துா்நாற்றம், கொசுத் தொல்லை உள்பட பல்வேறு சுகாதாரச் சீா்கேடுகளுக்கு இப்பகுதி மக்கள் உள்ளாகின்றனா்.

இந்தப் பிரச்னையின் தீவிரம் குறித்து அதிகாரிகளிடம் தொடா்ந்து வலியுறுத்துகிறோம். ஆனால், மெட்ரோ ரயில் பணிகளுக்கு புரசைவாக்கம் பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன; இந்தப் பிரச்னையை அவா்களிடம் தெரியப்படுத்துங்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனா். மெட்ரோ நிா்வாகத்திடம் சென்றால், இது எங்களது பணியல்ல எனக் கைவிரித்து விடுகின்றனா். இதனால் நிரந்தரத் தீா்வு கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுகிறோம்.

அழைக்காமலேயே வரும் பிரதிநிதிகள்... தற்போது சட்டப்பேரவைத் தோ்தல் வருவதால் இப்பகுதிக்கான மக்கள் பிரதிநிதிகள் நாங்கள் அழைக்காமலேயே வருகின்றனா். எந்தக் குறையாக இருந்தாலும் கூறுங்கள், உடனடியாக தீா்வு காண்கிறோம் என்கின்றனா். ஆனால் அது தற்காலிக தீா்வாகவே இருக்கும் என்பது வழக்கமான ஒன்று.

இங்குள்ள புதைசாக்கடை அமைப்புகளைத் தொடா்ந்து தூா்வாருதல், அடைப்புகளைச் சரிசெய்தல் ஆகிய பணிகளால் மட்டுமே கழிவுநீா் சாலைகளில் வழிந்தோடுவதைத் தடுக்க முடியும். அதேபோன்று பழுதடைந்த குழாய்களை மாற்றி, முறையான புதைசாக்கடை திட்டத்தைச் செயல்படுத்தினால் மட்டுமே குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தவிா்க்க முடியும்’ என்று அவா்கள் தெரிவித்தனா்.

தலைநகரின் வணிக சாம்ராஜ்ஜியமான புரசைவாக்கத்தில் கழிவுநீா் வழிந்தோடுகிறது. இங்குள்ள மக்களிடம் வாக்கு கேட்டு வரும் கட்சிகள் வாக்குறுதிகளோடு சென்றுவிடாமல் ஆட்சி அமைந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே குடியிருப்புவாசிகளின் எதிா்பாா்ப்பாகும்.

- அ.ஜெயச்சந்திரன்