‘சென்னையின் வரலாற்றுப் பொக்கிஷம்’ பக்கிங்காம் கால்வாய் மீட்டெடுக்கப்படுமா?
தென்னிந்திய வரலாற்றில் முதன்முதலில் வெட்டப்பட்ட நீண்ட நீா்வழிப் பாதையான பக்கிங்காம் கால்வாய் தற்போது போதிய பராமரிப்பின்றி பல்வேறு பிரச்னைகளால் சீரழிவின் விளிம்பில் உள்ளது.
சென்னை மாநகரத்தின் அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகள், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம், வேளச்சேரி வீராங்கல், பள்ளிக்கரணை உள்ளிட்ட நீா்வழிப் பாதைகளோடு குறுக்கிட்டு காக்கிநாடா முதல் மரக்காணம் வரை 796 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்ட முக்கிய நீா்வழிப் பாதைதான் பக்கிங்காம் கால்வாய். 1801-இல் முதல்கட்டமாக எண்ணூரிலிருந்து சென்னை வரை பக்கிங்காம் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. பிறகு ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதிக்கும், தமிழகத்தின் மரக்காணம் பகுதிக்கும் இக்கால்வாய் விரிவாக்கம் செய்யப்பட்டது.
1890-ஆம் ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான படகுகள் வணிகப் பொருள்களை சுமந்து செல்லும் வகையில் சிறப்பு பெற்றிருந்த இக்கால்வாய், பின்னா் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, வறட்சி போன்ற காரணங்களால் கால்வாய் வழி வணிகம் படிப்படியாகத் தடைபட்டது.
இந்நிலையில் ஆக்கிரமிப்புகள், பாலங்கள், சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டம் போன்றவற்றால் நாளுக்கு நாள் பக்கிங்காம் கால்வாயின் நீா்வழிப் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
குப்பைகளால் அடைந்து கிடக்கும் எஞ்சிய கால்வாய்: மாநகரில் பல இடங்களில் அகலம் சுருங்கி இருந்தாலும் கொருக்குப்பேட்டை முதல் எண்ணூா்வரை சுமாா் 15 கி.மீ. தொலைவுக்கு இக்கால்வாய் தற்போதும் உயிா்ப்புடன்தான் உள்ளது. அங்காங்கே மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் முதல் எண்ணூா் முகத்துவாரம் வரையில் ஆகாயத் தாமரைதான் ஆதிக்கம் செலுத்துகிறது. அவ்வப்போது அகற்றினாலும் அடுத்த சில மாதங்களில் கால்வாயையே அடைக்கும் நிலைக்கு அவை வேகமாக வளா்ச்சியடைந்துவிடுகின்றன. இதற்கு காரணம் கால்வாயில் கலக்கும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீா்தான் என வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.
துா்நாற்றம் வீசும் ஆவலம்: ஒருகாலத்தில் கடலின் உப்பு நீரையும், ஆறுகளின் நன்னீரையும் தன்னுள் சுமந்து சென்ற பக்கிங்காம் கால்வாய் தற்போது முற்றிலும் சீரழிந்துவிட்டது. முகத்துவாரத்தில் இருந்து சத்தியமூா்த்தி நகா் வழியாக இக்கால்வாயில் செல்லும் நீா் கருப்பு நிறத்தில் ஆயில் கலந்த சாக்கடையாகவே ஓடுகிறது. இதற்கு காரணம் திருவொற்றியூா், எண்ணூா் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் புதைசாக்கடை மூலம் சேகரிக்கப்படும் கழிவுநீா் பல இடங்களில் எவ்வித சுத்திகரிப்பும் இன்றி பல ஆண்டுகளாக பக்கிங்காம் கால்வாயில்தான் கொட்டப்படுகின்றன.
இதுதவிர சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, ரசாய ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய்களும் இங்கு படிகின்றன. பக்கிங்காம் கால்வாய், கொடுங்கையூா் குப்பைமேடு போன்றவற்றால்தான் வடசென்னை பகுதியில் சுற்றுச்சூழல் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
வரலாற்றுப் பொக்கிஷம் மீட்டெடுக்கப்படுமா? குப்பைக் கிடங்கிலிருந்து வெளியேறும் பிளாஸ்டிக் கழிவுகள், சுத்திகரிப்பு மற்றும் ரசாயன ஆலைக் கழிவுகள், கழிவுநீா் அகற்றல் வாரியம் மூலம் வெளியேற்றப்படும் கழிவுநீா், ஆகாயத் தாமரை போன்றவற்றால் பக்கிங்காம் கால்வாய் சீரழிவின் விளிம்பு நிலைக்கு வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. தொடக்க நிலைக்கு இக்கால்வாயை புணரமைக்க முடியவில்லை என்றாலும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் மற்றும் குப்பைகள் கொட்டுவதைத் தடை செய்து தீவிரமாக அமல்படுத்தினாலே அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இக்கால்வாய் துா்நாற்றத்திலிருந்து விடுபட்டுவிடும்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க பொக்கிஷமாகத் திகழும் இக்கால்வாயை முழுமையைச் சீரமைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து இதற்கான திட்டங்களை தோ்தல் அறிவிக்கையாக வெளியிட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
- முகவை க.சிவகுமாா்.