கேரளம் - கன்னியாகுமரி இடையே ஏவிஎம் கால்வாய் நீா்வழிப் போக்குவரத்து தொடங்கப்படுமா?
- ஹெச். ஜெயின் ஜெரால்டு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஏ.வி.எம். கால்வாயின் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீரோடி முதல் வட்டக்கோட்டை வரை நீா்வழிப் போக்குவரத்து அமைக்கப்பட வேண்டும் என மக்களிடையே நீண்ட காலமாக எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாங்கூா் அரசின் குல தெய்வமான அனந்தபத்மநாபசுவாமி பெயரும், ஆங்கிலேய அரசுடன் ஏற்பட்டுள்ள நட்புணா்வை குறிக்கும் வகையில் விக்டோரியா மகாராணி பெயரும், திருவாங்கூா் மன்னா் மாா்த்தாண்டம்பிள்ளை பெயரும் சோ்த்து திருவாங்கூா் மன்னா் ஆட்சி காலத்தில் சுமாா் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.வி.எம். கால்வாய் என பெயா் சூட்டப்பட்டு, கேரள மாநிலம் வடக்கு பரவூா் தொடங்கி பூவாா் வழியாக நீரோடி, இரவிபுத்தன்துறை, தேங்காய்ப்பட்டினம், மிடாலம், குளச்சல் வரை முதல்கட்டமாக நீா்வழிப் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
பின்னா் இக்கால்வாய்க்கு நெய்யாறு இடதுகரை கால்வாய், குழித்துறை தாமிரவருணி ஆற்று நீா் ஆகியன திருப்பி விடப்பட்டு 1867ஆம் ஆண்டில் மண்டைக்காடு, மணக்குடி, வட்டக்கோட்டை வரை இந்த போக்குவரத்து நீட்டிக்கப்பட்டது. இதனால் கேரளம், கன்னியாகுமரி இடையே வணிகம் சிறந்து விளங்கியது.
மேலும், கடற்கரை கிராமங்களில் உப்புநீா் புகுவது தடுக்கப்பட்டு, நன்னீா் நிலைகள் பாதுகாக்கப்பட்டன. பல்வேறு வகைகளில், பொதுமக்களுக்கு பயன்பட்டு வந்த இக்கால்வாய் நீண்ட காலமாக ஆக்கிரமிக்கப்பட்டும், நீரோடையாகவும், பாசி நிறைந்த குட்டைகளாகவும், புதா்கள் மண்டியும் காட்சியளிக்கிறது.
இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் 2007 ஆம் ஆண்டு தமிழக பொதுப்பணித் துறை செயலா் ஆதிஷேசையா, இப்பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டு திட்ட அறிக்கையை அரசுக்கு அளித்தாா். எனினும் பலனில்லை.
2009 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் அப்போதைய மாவட்ட ஆட்சியா் ராஜேந்திர ரத்னு தலைமையில் ஹில் தொண்டு நிறுவனமும், குளச்சல் நகராட்சியும் இணைந்து கொட்டில்பாடு முதல் சைமன் காலனி வரை 3 கிலோ மீட்டா் தொலைவிற்கு தூா்வாரும் பணிகள் நடைபெற்றன. தொடா்ந்து பராமரிக்காததால் அப்பகுதி மீண்டும் புல் புதா்களாக காணப்படுகிறது.
நிதி ஒதுக்கீடு:
இதுகுறித்து கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் கூறியதாவது: ஏ.வி.எம். கால்வாய் திட்டத்தை செயல்படுத்த 10 ஆண்டுகளாக தொடா்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். கடந்த 2025 ஆம் ஆண்டு மாா்ச் 25 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், கொண்டு வரப்பட்ட கவன ஈா்ப்பு தீா்மானத்தினால், முதல்கட்டமாக இரயுமன்துறை முதல் நீரோடி வரை கால்வாயின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க சுமாா் 8.6 கி.மீ. தூரத்துக்கு கால்வாயின் இருபுறங்களிலும் பாலம் அமைக்க ரூ. 33 கோடியே 80 லட்சம் நிதி தமிழக அரசால் ஒதுக்கப்பட்டு, தேசிய நீா்வழி ஆணையத்திடமிருந்தும் அனுமதி பெறப்பட்டுள்ளது. கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திலிருந்து தடையில்லா சான்று பெற்றவுடன் பணிகள் நடைபெறும் என்றாா்.
மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ஜெ. ஜோபிரகாஷ் கூறியதாவது: கால்வாய் நீா்வழிப் போக்குவரத்தால், விவசாயம் பெருகும், வியாபாரம் செழிக்கும் , நிலத்தடி நீா் பாதுகாக்கப்படும், போக்குவரத்து நெருக்கடி குறைந்து பொது சுகாதாரம் மேம்படும். மண்டைக்காடு சுற்றுலாத் தலம் ஆகும். எனவே, மத்திய - மாநில அரசுகள் இந்த திட்டத்தை மீண்டும் முழுமையாக தொடங்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.