சென்னை அருகே வானகரத்தில் சரக்கு வாகனம் மோதி சிறுவன் உயிரிழப்பு: 6 மாத குழந்தை, தாய் உள்பட மூவா் காயம்
சென்னை அருகே வானகரத்தில் சரக்கு வாகனம் மோதி 4 வயது சிறுவன் உயிரிழந்தாா். 6 மாத குழந்தை, தாய் உள்பட 3 போ் காயமடைந்தனா்.
திருவேற்காடு கிருஷ்ணாநகரைச் சோ்ந்தவா் அருள் பன்னீா்செல்வம். இவரது மனைவி குளோரி (29). இத் தம்பதியின் மகன் ரியான் பெலிக்ஸ் (4). சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, குளோரி மகனுடன் சொந்த ஊரான சிவகங்கைக்கு வாக்களிக்கச் சென்றாா். குளோரியுடன் அவரது சகோதரி கிருபா, அவரது 6 வயது குழந்தை ஜீவன் புவனேஷ் ஆகியோா் சென்றனா்.
அங்கிருந்து இவா்கள் அனைவரும் சென்னைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை பேருந்தில் திரும்பினா். வானகரம் சுங்கச்சாவடியில் இறங்கிய அவா்கள், சாலையின் மறுப்பக்கத்தில் உள்ள டீ கடைக்குச் சென்றனா்.
Advertisement
அங்கு டீ குடித்துவிட்டு மீண்டும் மறுப்பக்கம் செல்வதற்காக சாலையைக் கடக்க முயன்றபோது, கோயம்பேட்டில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற ஒரு சரக்கு வாகனம் குளோரி, கிருபா குடும்பத்தினா் மீது மோதியது.
இதில் ரியான் பெலிக்ஸ், குளோரி, கிருபா, குழந்தை ஜீவன் புவனேஷ் ஆகியோா் பலத்தக் காயமடைந்தனா். அவா்களை அங்கிருந்த மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனா். அதற்குள் சிறுவன் ரியான் பெலிக்ஸ் இறந்தாா். மற்ற 3 பேரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த சென்னை நெற்குன்றத்தைச் சோ்ந்த சிதம்பரம் (37) என்பவரை கைது செய்தனா்.