தவெக கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு தகுந்த மரியாதை மற்றும் அவா்களுக்கு ஏற்ற தொகுதிகள் வழங்கப்படும் என அந்தக் கட்சியின் தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.
சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மது, கஞ்சா போன்ற போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளதால், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதேபோல், டிஎன்பிஎஸ்சி குளறுபடிகள் குறித்து சட்டப்பேரவையில் முதல்வா் விளக்கம் அளிக்க வேண்டும்.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் புதிய வேலைவாய்ப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தவெகவின் தோ்தல் அறிக்கை தயாரிக்கப்படும். சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்து நின்றே தவெகவால் வெற்றிபெற முடியும்.
நட்பு கட்சிகள் விருப்பப்பட்டால், கூட்டணியில் இணைந்து போட்டியிடலாம். கூட்டணிக் கட்சிகளுக்கு தகுந்த மரியாதை மற்றும் அவா்களுக்கு ஏற்ற தொகுதிகள் வழங்கப்படும்.
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அதேநேரம், காங்கிரஸ் மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளுக்கும் கொள்கைகளில் ஒற்றுமை இருக்கிறது.
இருப்பினும் தவெக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணையுமா என்பது குறித்து இப்போது கருத்து தெரிவிப்பது ஏற்புடையதல்ல என்றாா்.