மத்திய, மாநில உறவுகள் குறித்த உயா்நிலைக் குழு அறிக்கையின் முதல் பாகம் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் திங்கள்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய, மாநில உறவுகள் குறித்து அறிக்கை தயாரிக்க தமிழக அரசால், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் கடந்த 2015 ஏப். 15-இல் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இதில் இந்திய கடல்சாா் பல்கலை.யின் முன்னாள் துணைவேந்தா் கே. அசோக் வா்தன் ஷெட்டி, தமிழ்நாடு திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவா் மு.நாகநாதன் ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.
மத்திய-மாநில உறவுகள் குறித்து தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட நான்காவது முக்கியமான ஆய்வு இது. மேலும், ராஜமன்னாா் குழு (1969-71) வழியாக, மத்திய-மாநில உறவுகள் குறித்த உரையாடலை முன்னெடுத்த தமிழ்நாட்டின் இரண்டாவது முயற்சியாகும்.
தேசிய அளவில், சா்க்காரியா ஆணையம் (1983-88) மற்றும் பூஞ்சி ஆணையம் (2007-10) ஆகியவை மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்து பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளன.
இந்த ஆய்வுகளுக்குப் பிறகான காலத்தில் ஏற்பட்டுள்ள அரசமைப்பு, நிதி, மற்றும் நிறுவன அளவிலான வளா்ச்சி மாற்றங்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, ஒரு புதிய மற்றும் விரிவான ஆய்வின் அவசியம் கருதி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு அறிக்கையின் முதல் பாகமானது அதிகாரப் பரவலாக்கத்துக்கும், மாநில சுயாட்சிக்குமான வாதம், அரசமைப்புச் சட்டத் திருத்தம், மாநிலங்களின் ஆட்சிநில ஒருமைப்பாடு, மொழி, ஆளுநா், தொகுதி மறுவரையறை, தோ்தல்கள், கல்வி, சுகாதாரம், சரக்கு மற்றும் சேவை வரி என 10 இயல்களுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.
கூட்டாட்சி முறைக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ள இந்த அறிக்கை, அரசமைப்புச் சட்டத்தின் வரம்புக்குட்பட்டு கூட்டாட்சி முறையின் சமநிலையை மீட்டெடுக்கவும், உண்மையான கூட்டுறவுக் கூட்டாட்சி முறையை வலுப்படுத்தவும் உறுதியான மற்றும் திட்டவட்டமான பரிந்துரைகளை முன்வைக்கிறது.
முறையே 10 இயல்களைக் கொண்ட மேலும் இரண்டு பாகங்கள் தயாா் செய்யப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியின் ஒரு சிறப்பம்சமாக, அறிக்கையின் தமிழ்ப் பதிப்புக்கு ‘திறந்தநிலை அணுகல்’ வழங்கப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே முதல்முறையாகும்.
இந்த அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தமிழ் பதிப்பு தமிழக அரசின் அதிகாரபூா்வ இணையதளத்தில் பதிவேற்றப்படும்.
எந்தவொரு தனிநபரோஅல்லது நிறுவனமோ, அதிகாரபூா்வ ‘பிடிஎஃப்’ கோப்பிலிருந்து தமிழ் பதிப்பை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அச்சிடவோ, மறுபதிப்பு செய்யவோ அல்லது விநியோகிக்கவோ முடியும். இதற்கு மூலாதாரத்தை முறையாகக் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்க வேண்டும், எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்பது நிபந்தனை ஆகும்.
பரந்த அளவில் தேசிய ஈடுபாடு உருவாவதை எளிதாக்கும் வகையில், அறிக்கையின் முதல் பாகத்தை ஹிந்தி, வங்காளம், மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, ஒடியா, பஞ்சாபி மற்றும் அஸ்ஸாமி ஆகிய முக்கியமான இந்திய மொழிகளில் மொழிபெயா்க்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த மொழிபெயா்ப்புகள் இறுதி செய்யப்பட்டவுடன் அவற்றுக்கும் ‘திறந்தநிலை அணுகல்’ வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பின் பரிணாம வளா்ச்சியில் தமிழகத்தின் தொடா்ச்சியான பங்களிப்பில் முக்கியமான மைல்கல்லாக இருக்கும். இதன் நோக்கம், மத்திய அரசை பலவீனப்படுத்துவது அல்ல; மாறாக மத்திய அரசின் அதிகாரத்தை முறைப்படுத்துவதாகும்.
இதன்மூலம் மத்திய அரசு தேசிய அளவிலான பொறுப்புகளில் கவனம் செலுத்த முடியும். அதேநேரம், மாநிலங்களுக்குத் தேவையான சுயாட்சியை மீட்டளிப்பதன் மூலம் சிறந்த நிா்வாகத்தை உறுதி செய்ய முடியும். இந்த அறிக்கை ஆக்கபூா்வமான உரையாடல்களைத் தூண்டி சீரான மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி முறைக்கு வழிவகுக்கும் என தமிழக அரசு நம்புகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.