சென்னை: புலம்பெயா்ந்த தமிழா் நலனுக்கான ‘தமிழா் தடம்’ வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் வாழும் புலம்பெயா்ந்த தமிழா்களின் இடம்பெயா்வு தொடா்பான வரலாற்றுச் செய்திகள், ஆய்வுக் கட்டுரைகள், குடிபெயா்வு குறிப்புகள், வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்யவும், பகிரவும் ‘தமிழா் தடம்’ என்ற இணையவழிக் களஞ்சியத்தை தமிழக அரசு உருவாக்கி உள்ளது. https://nrtamils.tn.gov.in/tamilar-thadam/என்ற இந்த வலைதளத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் நாசா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
பணி நியமன ஆணைகள் வழங்கல்: அயலகத் தமிழா் வாழும் பகுதிகளுக்கு பயிற்சி பெற்ற ஆசிரியா்கள், தமிழ்க் கலைஞா்களை அனுப்பி, நேரடிப் பயிற்சி வகுப்புகள் மூலம் அயலகத் தமிழா்களுக்கு தமிழ்மொழி மற்றும் கலைகளை கற்பிக்க ‘தமிழ் மணம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது. இந்தத் திட்டத்துக்காக ரியூனியன், மாலத்தீவு, இந்தோனேசியா, மலாவி, கம்போடியா உள்ளிட்ட 8 நாடுகளில் பணிபுரிய தோ்வு செய்யப்பட்டுள்ள 10 கலை பயிற்றுநா்களுக்கு அமைச்சா் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
நிகழ்வில், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலா் ரீட்டா ஹரிஷ் தக்கா், அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையா் மா.வள்ளலாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.