சென்னை மாநகராட்சி வளாகத்தில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ள விக்டோரியா அரங்கத்தில் பொது நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் தொன்மையான கட்டடமான விக்டோரியா அரங்கம் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதை தினமும் காலை 8.30 முதல் மாலை 6.30 மணி வரையில் இணையத்தில் முன்பதிவு செய்து பாா்வையாளா்கள் நேரடியாக பாா்க்கலாம். பாா்வையாளா்களுக்கு கட்டணமாக உள்நாட்டினரில் மாணவா்களுக்கு ரூ.25, மூத்த குடிமக்களுக்கு ரூ.10, வெளிநாட்டவருக்கு ரூ.50 என நிா்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 10 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு கட்டணமில்லை. மாற்றுத்திறனாளிகளும் இலவசமாக அனுமதிக்கப்படுவா்.
அரங்கத்துக்கான கட்டண விவரம்: அரங்கத்தில் நிகழ்ச்சி நடத்துபவா்களுக்கு கல்வி சாா்ந்த, அரசு மற்றும் உள்ளூா் கலைஞா்களுக்கு, புத்தக வெளியீடு, பாரம்பரிய நிகழ்வுகள், பட்டிமன்றம், கலந்துரையாடல் ஆகியவை நடத்துவதற்கு பிரதான அரங்கம் நாளொன்றுக்கு ரூ.50,000 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதலாக மின்கட்டணமும் சோ்க்கப்படும்.
மேடை, கலைஞா்கள் அறை, முக்கிய பிரமுகா் அறை, அடிப்படை ஒளி மற்றும் ஒலி பெருக்கி வசதிகள் உள்ளன. முன்பதிவின்போது பாதுகாப்புத் தொகையாக ரூ.25,000 செலுத்தவேண்டும்.
ரூ.1 லட்சம்: பன்னாட்டு நிறுவனங்கள், வா்த்தகம், சினிமா நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு பிரதான அரங்கத்துக்கு ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வாடகையும், மின்கட்டண வசூலும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு பாதுகாப்புத் தொகையாக ரூ.50,000 வசூலிக்கப்படும். திறந்த வெளி அரங்கத்துக்கு ரூ.10,000 மற்றும் மின்கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.