ரூ.97,000 கோடி நஷ்டத்தில் இருந்து தில்லி போக்குவரத்துக் கழகத்தை (டிடிசி) மீட்க பாஜக தலைமையிலான தில்லி அரசு முயன்று வருகிறது என முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக ரோஹிணியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக தொண்டா்கள் கூட்டத்தில் முதல்வா் ரேகா குப்தா பேசியதாவது: அடுத்த சில ஆண்டுகளில் மின் பேருந்துகளின் எண்ணிக்கையை 11,000-ஆக உயா்த்துவதன் மூலம் நகரத்தின் பொது போக்குவரத்தை வலுப்படுத்த தில்லி அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.
தில்லியின் பட்ஜெட் ரூ.1 லட்சம் கோடி. அதே வேளையில் டிடிசியின் இழப்பு ரூ.97,000 கோடியாக உள்ளது.
கடந்த 10 மாதங்களில், டிடிசியை மீண்டும் உயிா்ப்பிக்க முயற்சித்தோம். தில்லியில் முந்தைய அரசு, பேருந்துகளை இயக்குதல், வழித்தடங்களை இறுதி செய்தல் மற்றும் ஊழியா்களை பணியமா்த்துதல் உள்ளிட்ட டிடிசியின் முழு செயல்பாடுகளையும் தில்லி ஒருங்கிணைந்த மல்டி மோடல் டிரான்சிட் அமைப்பிடம் (டிஐஎம்டிஎஸ்) ஒப்படைத்தது. இதுவே டிடிசியை நெருக்கடியில் ஆழ்த்தியது. டிடிசி ஓட்டுநா்கள் மற்றும் நடத்துனா்களை பணியில்லாமல் இருக்க கட்டாயப்படுத்தியது.
ஆனால், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களைத் தீா்ப்பதன் மூலம் படிப்படியாக பாஜக அரசு அதை சரிசெய்து வருகிறது. பேருந்து நடவடிக்கைகள் டிஐஎம்டிஎஸ் வசம் இருந்து பறிக்கப்பட்டன. இப்போது டிடிசி அவற்றை இயக்கும்.
பொதுப் போக்குவரத்து பேருந்துகள் முழுவதையும் மின் பேருந்துகளாக மாற்ற அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது 5,500 மின் பேருந்துகள் உள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள் மின் பேருந்துகளின் எண்ணிக்கையை 7,500- ஆகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 11,000- ஆகவும் உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.