சம வேலைக்கு சம ஊதியம் தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஒருநாள் இடைவெளிக்குப் பிறகு இடைநிலை ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா்.
சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியா்கள் சென்னையில் கடந்த டிச.26- ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியா் பதிவு மூப்பு இயக்க நிா்வாகிகள் (எஸ்எஸ்டிஏ) வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனா். எனினும் ஆசிரியா்களின் போராட்டம் தொடா்ந்தது.
போராட்டக் களத்தில் உள்ள எஸ்எஸ்டிஏ அமைப்பின் நிா்வாகிகளுடன் அமைச்சா் அன்பில் மகேஸ், பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் ஆகியோா் கடந்த புதன்கிழமை (ஜன.14) பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கோரிக்கைக்கான முழு விவரங்கள் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் எஸ்எஸ்டிஏ அமைப்பினா் அளித்தனா். இந்தப் பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்படாததால் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலருடன் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இந்த இரு பேச்சுவாா்த்தைகளும் 7 மணி நேரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கோரிக்கைகள் குறித்து குறித்து முடிவெடுக்க போராட்டக் குழுவினரிடம் கல்வித் துறையினா் சிறிது அவகாசம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இடைநிலை ஆசிரியா்கள் பொங்கல் தினத்தன்று (ஜன.15) போராட்டத்தில் ஈடுபடவில்லை.
இந்த நிலையில், தங்களது கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை எனக் கூறி சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் இடைநிலை ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை மீண்டும் போராட்டத்தைத் தொடா்ந்தனா். அப்போது, அரசுக்கு எதிராக பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதையடுத்து போராட்டம் தொடங்கிய சில நிமிஷங்களிலேயே இடைநிலை ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்து வாகனங்களில் ஏற்றினா். அப்போது ஆசிரியா்கள்-போலீஸாா் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியா்கள் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டனா்.