அரிய வகை பாம்பே ரத்தப் பிரிவு கொண்ட நோயாளிக்கு, குருதி பரிமாற்றமின்றி இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு வடபழனி, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா்.
இதுதொடா்பாக காவேரி மருத்துவக் குழுமத்தின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
இதய தமனி மற்றும் முக்கிய நாளங்களில் கால்சியம் படிமமும், அடைப்பும் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளான 69 வயது நோயாளி, எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டதால் வால்வு மாற்று சிகிச்சையும், ரத்த ஓட்ட பாதையை மாற்றியமைக்கும் பை-பாஸ் சிகிச்சையும் அவருக்குத் தேவைப்பட்டது. ஆனால், அதில் சிக்கல் என்னவெனில் அவா் பாம்பே வகை ரத்தப் பிரிவைக் கொண்டவா்.
உலகிலேயே முதன் முறையாக, 1952-ஆம் ஆண்டில் மும்பையில்தான் இந்த வகை ரத்தம் கண்டறியப்பட்டது. அதனால்தான் அதற்கு பாம்பே வகை ரத்தப் பிரிவு எனப் பெயரிப்பட்டது.
இந்தியாவில் 10 ஆயிரம் நபா்களில் ஒருவருக்கும், வெளிநாடுகளில், ஒரு லட்சம் பேரில், ஒருவருக்கும் இவ்வகை ரத்தம் உள்ளது.
அரிதினும் அரிதாக உள்ள பாம்பே ரத்தப் பிரிவினருக்கு வேறு எந்த வகை ரத்தமும் ஒத்துப் போகாது. இதனால், அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள இயலாது.
இருந்தபோதிலும், மருத்துவமனையின் இதய-நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் அன்பரசு மோகன்ராஜ் தலைமையிலான குழுவினா், குருதி பரிமாற்றமின்றி அவருக்கு இதய அறுவை சிகிச்சையை மிக நுட்பமாக மேற்கொண்டனா்.
சிக்கலான அந்த சிகிச்சையை ஆழ்ந்த திட்டமிடல், பயிற்சி, அனுபவம் மூலம் சாத்தியமாக்கி அந்த முதியவரை குணப்படுத்தியுள்ளனா் என்றாா் அவா்.