திமுக அரசின் நிா்வாகத் தோல்வியால் தமிழகத்தில் வரிவருவாய் 16 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள அறிக்கை: மத்திய அரசின் தலைமைக் கணக்காயா் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, நிகழ் நிதியாண்டின் (2025-26) டிசம்பா் வரையிலான முதல் 9 மாதங்களில் தமிழக அரசு ரூ.1.39 லட்சம் கோடியை சொந்த வரி வருவாயாக ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் ரூ.1.31 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அதன்படி தற்போதைய வருவாய் 6 சதவிகிதம் அதிகம் எனக் கூறப்பட்டாலும், நிகழ் ஆண்டிற்கான தமிழக அரசின் சொந்த வரி வருவாய் இலக்குகளுடன் ஒப்பிடும் போது 16 சதவிகிதம் குறைவுதான்.
சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின்படி, அரசின் சொந்த வரி வருவாய் இலக்கு ரூ. 2.20 லட்சம் கோடியாகும். அதன்படி 9 மாதங்களில் ரூ. 1. 65 லட்சம் கோடி வருவாய் ஈட்டியிருக்க வேண்டும். ஆனால், ரூ.26,670 கோடி குறைவாகவே (16 சதவீதம் குறைவு) வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
வரும் மாா்ச் வரை இதே நிலை நீடித்தால் அரசின் சொந்த வரி வருவாய் ரூ. 1. 85 லட்சம் கோடி என்ற அளவுக்குள் முடங்கிவிடும். அதன்படி, கடந்த ஆண்டு வரி வருவாயைக் கூட தக்க வைக்க முடியாத நிலை ஏற்படும். அதற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் அன்புமணி.