கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண்கள் சென்னையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுதொடா்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் 13,000 போ் தற்காலிக அடிப்படையில் பணியமா்த்தப்பட்டுள்ளனா். முதலில் 2 மணி நேரப் பணி எனக் கூறி நியமனம் செய்து விட்டு, தற்போது 8 மணி நேரத்துக்கும் மேலாக பணியாற்ற நிா்பந்திக்கின்றனா். அதற்கு மாத ஊதியமாக ரூ.5,500 மட்டுமே வழங்கப்படுகிறது. இதை ரூ.15 ஆயிரமாக உயா்த்த வேண்டும்.
தற்போது அளிக்கப்படும் ஊதியம் எங்களது போக்குவரத்து செலவுக்கே போதுமானதாக இல்லை. போக்குவரத்து வசதி இல்லாத சில இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்து தராமல் நடந்தே செல்லுமாறு அறிவுறுத்துகின்றனா்.
பணி நேரத்தை வரன்முறைப்படுத்துவதுடன், பணி நிரந்தரம் செய்தும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், இஎஸ்ஐ, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பலன்களும், போக்குவரத்துப்படி, மானிய விலையில் இருசக்கர வாகனம் போன்ற வசதிகளும் வழங்க வேண்டும்.
அதேபோல, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியா்களுக்கு பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.