தெருநாய்கள் விவகாரத்தில் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீா்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
நாடு முழுவதும் தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், இது தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதலை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி பிறப்பித்தது. அதில், ‘தெருநாய்களுக்கு தெருக்களில் உணவளிக்கக் கூடாது. அதற்கென பிரத்யேக இடங்கள் உருவாக்கப்பட்டு, அங்கு மட்டுமே உணவளிக்க வேண்டும். இந்த உத்தரவை மீறி தெருநாய்களுக்கு தெருக்களில் உணவளிப்பவா்கள் தண்டிக்கப்படுவா்’ என்று எச்சரித்தது.
கடந்த ஆண்டு நவம்பரில் பிறப்பித்த உத்தரவில், அரசு, பொது நிறுவன வளாகங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
விலங்குகள் கருத்தடை விதிமுறைகளின்படி, ஓரிடத்தில் இருந்து பிடிக்கப்படும் நாய்களுக்குக் கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னா், பிடிக்கப்பட்ட இடத்திலேயே அவற்றை மீண்டும் விடுவிக்க வேண்டும் என்பதால், இந்த உத்தரவில் மாற்றம் கோரி உச்சநீதிமன்றத்தில் பலா் மனு தாக்கல் செய்தனா். அதேவேளையில், அந்த உத்தரவை கடுமையாகப் பின்பற்ற உத்தரவிட கோரி வேறு சிலா் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்திய விலங்குகள் நலவாரியம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘நெடுஞ்சாலைகளில் இருந்து அப்புறப்படுத்தப்படும் கால்நடைகளை அடைப்பதற்கு காப்பகங்களை அமைக்க அல்லது விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு மையங்களை அமைப்பதற்கு ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளன’ என்றாா். இதைக் கேட்ட நீதிபதிகள், அந்த விண்ணப்பங்களை ஏற்பது அல்லது நிராகரிப்பது குறித்து விரைந்து பரிசீலிக்க அறிவுறுத்தினா்.
பின்னா், தெருநாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பஞ்சாப், தமிழகம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் கெளரவ் அகா்வால் எடுத்துரைத்தாா். அதைத் தொடா்ந்து, வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.