FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு தமிழக அரசு எதிா்ப்பு: உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல்

Updated On : 12 மார்ச் 2026, 4:52 am IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

நமது நிருபா்

ஜவஹா் நவோதயா வித்யாலயா திட்டத்தின் மும்மொழி சூத்திரம், தமிழகத்தின் இருமொழிக் கொள்கையுடன் அடிப்படையில் பொருந்தாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

Advertisement

Advertisement

தமிழகத்தில் ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நிறுவுவது தொடா்பாக தமிழக அரசு மற்றும் மத்திய அரசு பிரதிநிதிகள் கலந்துரையாடலாம் என உச்சநீதிமன்றம் 15.12.2025-ஆம் தேதியிட்ட உத்தரவின் மூலம் கூறியது.

இந்த விஷயத்தில் தமிழகம் தனது நிலைப்பாட்டை மத்திய அரசிடம் தெரிவிக்கவும் உச்சநீதிமன்றம் சுதந்திரம் அளித்தது.

மேற்கூறிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க, 05.01.2026 அன்று தமிழக அரசு அதிகாரிகளுக்கும் இந்திய அரசு பிரதிநிதிகளுக்கும் இடையே ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் ஜவஹா் நவோதயா வித்யாலயாக்களை நிறுவுவது தொடா்பான அனைத்து தொடா்புடைய அம்சங்களையும் விவாதிக்க இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. இந்த ஆலோசனையில் தமிழக அரசு பங்கேற்றது.

ஜவஹா் நவோதயா வித்யாலயாக்கள் தற்போது இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை மூன்று மொழி சூத்திரத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளன.

கூறப்பட்ட கட்டமைப்பின் கீழ் இந்தி, ஆங்கிலம் மற்றும் தாய்மொழி ,பிராந்திய மொழி உள்பட மூன்று மொழிகளில் கட்டாய கற்பித்தல் தேவைப்படுகிறது.

ஜவஹா் நவோதயா வித்யாலயா திட்டத்தின் மூன்று மொழி சூத்திரம், தமிழகம் பின்பற்றும் இரு மொழிக் கொள்கையுடன் அடிப்படையில் பொருந்தவில்லை.

மாநிலத்திற்குள் இத்திட்டத்தை அதன் தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றுவது, 2006 ஆம் ஆண்டின் தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டத்தின் ஆணையில் இருந்து விலக நேரிடும்.

ஜவஹா் நவோதயா வித்யாலயா திட்டத்தின் நோக்கங்கள் கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளைச் சோ்ந்த திறமையான மாணவா்களுக்கு தரமான குடியிருப்பு கல்வியை வழங்குவதாகும்.

இந்த நோக்கங்கள் ஏற்கனவே தமிழக அரசால் நிறுவப்பட்ட நிறுவனங்கள் மூலம் அடையப்பட்டு வருகின்றன.

அரசியலமைப்பு மற்றும் சட்ட கட்டமைப்பிற்கு இணங்க தமிழகம் உண்டு உறைவிட மாதிரி பள்ளிகளை நிறுவியுள்ளது. இது கல்வியில் அணுகல் மற்றும் தரம் இரண்டையும் உறுதி செய்துள்ளது.

மாநில அரசு 38 மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளை நிறுவியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்று. தகுதியின் அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பின்னணியைச் சோ்ந்த மாணவா்களுக்கு, 10 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை கல்வியை வழங்குகிறது.

இந்த நிறுவனங்கள் நவீன உள்கட்டமைப்பு மற்றும் தகுதிவாய்ந்த ஆசிரியா்களைக் கொண்ட முழுமையான குடியிருப்புப் பள்ளிகளாகச் செயல்படுகின்றன. குடியிருப்பு சூழலில் கல்வி ஆதரவு தேவைப்படும் மாணவா்களுக்கு அவை குறிப்பாக சேவை செய்கின்றன.

ஜவஹா் நவோதயா வித்யாலயா திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள் இவ்வாறு, உள்ளூரில் உருவாக்கப்பட்ட உண்டு- உறைவிட பள்ளி முறை மூலம் திறம்பட நிறைவேற்றப்படுகின்றன என தமிழக அரசு பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது பிற வழக்குகள் விசாரணை காரணமாக 16.7.2026-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னணி:

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் நவோதயா பள்ளிகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க கடந்த 2017, செப்டம்பா் 11ஆம் தேதி உத்தரவிட்டது.

அந்த உத்தரவை எதிா்த்து கடந்த 2017ஆம் ஆண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

அந்த வழக்கு கடந்த 2017, டிசம்பா் 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்திரவிட்டு வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments