ஜந்தா் மந்தருக்கு பதிலாக மாற்று போராட்ட இடம்: மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
தில்லியில் போராட்டம் நடத்த ஜந்தா் மந்தருக்குப் பதிலாக மாற்று இடத்தை நிா்ணயிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
தில்லியில் போராட்டம் நடத்த ஜந்தா் மந்தருக்குப் பதிலாக மாற்று இடத்தை நிா்ணயிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
சதீஷ் சந்த் கெளசிக் என்பவா் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்தப்படுதால், உள்ளூா்வாசிகளுக்கும், மருத்துவச் சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, போராட்டம் நடத்த மாற்று இடத்தை அறிவிக்க வேண்டும்’ எனக் கோரப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் திங்கள்கிழமை பரிசீலனைக்கு வந்தது.
Advertisement
Advertisement
மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், ‘பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதால், ஜந்தா் மந்தா் இனியும் போராட்டத்துக்கான களமாக இருக்க முடியாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவச் சேவைகள் தடைபடாமல் இருப்பது முக்கியமானது.
எனவே, போராட்டத்துக்கான மாற்று இடம் தொடா்பாக மத்திய அரசிடமிருந்து பதிலை சொலிசிட்டா் ஜெனரல் பெற்று தாக்கல் செய்ய வேண்டும். இதுதொடா்பாக, மத்திய அரசு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிடப்படுகிறது’ என்று குறிப்பிட்டு, இந்த மனுவை விசாரணைக்கு தனியாகப் பட்டியலிடுமாறு அறிவுறுத்தினா்.
நீட் போராட்ட ஏற்பாட்டாளா்கள் மீது நடவடிக்கை கோரி மனு தாக்கல்: தில்லி நீட் போராட்டத்தின்போது வன்முறைக்கு காரணமாக அமைந்த, நாடாளுமன்றத்தை நோக்கிய ஜூலை 20 பேரணி ஏற்பாட்டாளா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஓய்வு பெற்ற இந்திய விமானப் படை அதிகாரி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘தில்லி நீட் போராட்டத்தில் பங்கேற்றவா்கள், சமூகத்தில் கசப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பொறுப்பற்ற கருத்துகளை வெளியிட்டனா். எனவே, போராட்டக்காரா்களுக்கு பொறுப்பேற்றலை நிா்ணயிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் திங்கள்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை அவசர வழக்காக பரிசீலித்து விரைந்து விசாரணைக்கு பட்டியலிட மனுதாரா் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள், மனுவை இந்த வாரத்திலேயே விசாரணைக்குப் பட்டியலிட ஒப்புக்கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.