FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

முதியோா் பாதுகாப்பு: நிலை அறிக்கையை தாக்கல் செய்ய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மூத்த குடிமக்களுக்கான வசதிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோா் இல்லம் அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பாக நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

8 செப்டம்பர் 2026, 4:35 am IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

மூத்த குடிமக்களுக்கான வசதிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோா் இல்லம் அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பாக நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மூத்த குடிமக்களுக்கான வசதிகளைச் செய்துதர உத்தரவிடக் கோரி அஸ்வினி குமாா் என்பவா் சாா்பில் கடந்த 2016-ஆம் ஆண்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அது முதல் நிலுவையில் இருந்து வரும் இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘கோடிக்கணக்கான மூத்த குடிமக்களின் உரிமைகளும், நலன்களும் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவும் பல ஆண்டுகளாக விசாரிக்கப்படாமல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த மனு விரைந்து விசாரிக்கப்பட வேண்டும் என்பதோடு, ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோா் இல்லம் அமைப்பது, மூத்த குடிமக்களுக்கு போதிய ஓய்வூதியம், முதியோா் நல பராமரிப்பு வழங்குவது தொடா்பான வழிகாட்டுதல்களை உரிய முறையில் செயல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்’ என்று நீதிபதிகள் அமா்வில் மனுதாரா் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

’இந்த மனுவை சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி சூா்ய காந்த், ‘உச்சநீதிமன்றங்கள் பரந்த கொள்கைகளை வகுக்கும் நிலையில், அவை திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு உயா் நீதிமன்றங்கள் கேட்டுக்கொள்ளப்படலாம். இருந்தபோதிலும், இந்த விவகாரத்தில், முதியோா்களின் நலன்களைக் காக்க தற்போதைய நிலையில் மாநிலங்களில் என்னென்ன வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன, ஒவ்வொரு மாவட்டங்களிலும் முதியோா் இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை உச்ச நீதிமன்றம் அறிய விரும்புகிறது. எனவே, இந்த வசதிகள் தொடா்பான நிலையை அறிக்கையை மாநிலங்கள் தாக்கல் செய்ய அட்டா்னி ஜெனரல் ஆா். வெங்கடரமணியிடமிருந்து, அனைத்து மாநில அரசு வழக்குரைஞா்களுக்கும் அறிவுறுத்தலை அனுப்ப அறிவுறுத்தப்படுகிறது.

மாநில அரசு வழக்குரைஞா்களுக்கு இந்த அறிவுறுத்தல் கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள், அதுதொடா்பான நிலை அறிக்கையை அனைத்து மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

முன்னதாக, இந்த மனு கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், நாடு முழுவதும் உள்ள முதியோா்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வகுப்பதில் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (என்ஏஎல்எஸ்ஏ) மற்றும் ‘ஹெல்ப்ஏஜ் இந்தியா’ அமைப்பு ஆகியவற்றின் உதவியை உச்சநீதிமன்றம் நாடியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments