FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மக்களாட்சியின் மாண்புகள் பேரவையில் ஒலிக்கும்!

சட்டப்பேரவை கூடும் ஒவ்வொரு நாளும் மக்களின் வரிப் பணம் எரிந்துப் புகையாகிக் கொண்டிருக்கிறது.

3 செப்டம்பர் 2026, 3:02 am IST
தமிழக சட்டப்பேரவை - கோப்புப் படம்
பகிர்:

அகல் விளக்கு எரிவதில் எண்ணெய் புகையாகிக் கொண்டிருப்பதைப்போல், சட்டப்பேரவை கூடும் ஒவ்வொரு நாளும் மக்களின் வரிப் பணம் எரிந்துப் புகையாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஒரு நாள் செலவை அரசு அதிகாரபூர்வமாகத் தொகுத்து வெளியிடவில்லை; ஆனால், இந்திய நாடாளுமன்றத்தை நடத்த ஒரு நிமிஷத்துக்கு சுமார் ரூ. 2.5 லட்சமும், ஒரு நாளைக்கு சுமார் ரூ. 9 கோடியும் செலவாகிறது. இதிலிருந்து தமிழக சட்டப்பேரவைச் செலவை நம்மால் கணக்கிட்டுக் கொள்ள முடியும்.

இந்த மதிப்பீடு தவிர, ஊதியங்கள், படிகள், நிர்வாக ஊழியர்கள், பாதுகாப்பு, மின்சாரம், தொழில்நுட்ப ஆதரவு என நீளும் இந்தச் செலவு முழுவதும் உழைப்பாளிகளின் வியர்வையிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட பணம். கூச்சலும் வெளிநடப்பும் தொடர் ஒத்திவைப்பும் அவையை முடக்கும் ஒவ்வொரு மணித்துளியிலும் அந்த ரத்த வியர்வை எவ்வாறு விரயமாகிறது என்பதை எத்தனை பேர் உணர்ந்து செயல்படுகிறார்கள்?

இது எந்த ஓர் அரசையும் நோக்கிய குற்றச்சாட்டு அல்ல; அவை என்னும் நிறுவனத்தை மீட்டெடுக்கும் ஒரு சிந்தனை வெளிப்பாடு, அதை உணர்ந்துகொள்ள, முதலில் அதன் பின்னடைவை நேர்மையுடன் பரிசீலிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

சட்டப்பேரவை கூடும் காலத்தில், மானியம் தொடர்பான குறிப்புகளும் துறைவாரி ஆவணங்களும் கட்டுகட்டாக உறுப்பினர்களின் தங்குமிடத்துக்கு வந்து குவிகின்றன. உறுப்பினர் படித்து ஆயத்தமாக வேண்டிய விவரங்கள் அவற்றுக்குள் அடங்கியிருக்கின்றன. ஆனால், அவற்றைத் திறந்தும் பார்க்காமல், அவை என்ன ஆவணங்கள் என்பதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் பழைய பேப்பர் வியாபாரிகள் எடை போட்டு அள்ளிச் செல்வதை நான் நேரில் கண்டிருக்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு உறுப்பினருக்கும் தம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ளும் பொறுப்பு உண்டு; அந்தத் தகுதி முன்பு எப்படி இருந்தது? என்பதை வரலாறு காட்டுகிறது.

அரசியல் பார்வையாளர்கள் சட்டப்பேரவை வரலாற்றை '1967-க்கு முன்', '1967-க்குப் பின்' என்று பிரிக்கிறார்கள். மூதறிஞர் ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் ஆகியோரின் ஆட்சித் தூய்மையையும், எதிர்வரிசையில் நின்ற ப. ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி, கே.டி.கே. தங்கமணி ஆகியோரின் அர்ப்பணிப்பையும் இன்று மீள்வாசிப்பு செய்து பார்க்க வேண்டும். ஆளும் காங்கிரஸுக்கும் எதிரிருந்த கம்யூனிஸ்ட் வரிசைக்கும் இடையே நடந்த விவாதங்கள், இரும்பு உலையில் புடம் போட்ட உருக்கு போல போலக் கருத்துகளை உருவாக்கியிருந்தன. அன்று நடைபெற்ற விவாதங்களை இன்று மீண்டும் வாசித்தால், அவற்றுள் புதைந்திருக்கும் நெறிசார்ந்த அரசியலை உணர முடியும். தனி நபர் தாக்குதலைவிடக் கொள்கை சார்ந்த காரசாரமே அங்கு மேலோங்கி இருந்தது.

அதன் பிறகு, விவாதங்களில் பேச்சுத்திறனும் தமிழ்ப் புலமையும் இடம் பெறத் தொடங்கின. இது தமிழர் சார்ந்த முன்னேற்றம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இத்துடன் நெறிசார் அரசியலின் மீதிருந்த கவனம் தொடர்ந்திருந்தால், சட்டப்பேரவையின் தரம் வேறு உயரத்துக்குச் சென்றிருக்கும். தேர்தல் வெற்றியில் மட்டுமே கண்ணுங்கருத்துமாக நின்றபோது, அந்த உலை தணிந்தது; சட்டப்பேரவை கூடும் நாள்களே சுருங்கின; விவாதம் குறைந்து, மசோதாக்கள் அவசரமாக நிறைவேற்றப்படும் நடைமுறைகள் தோற்றம் பெற்றன.

இந்த வீழ்ச்சியைப் புள்ளிவிவரங்கள் படம் பிடிக்கின்றன. பி.ஆர்.எஸ். நிறுவனம், தரவுகளின் அடிப்படையில் சட்டப்பேரவை நிகழ்வுகளை ஆய்வு செய்துள்ளது. பதினாறாவது தமிழ்நாடு சட்டப்பேரவை (2021-2026) ஐந்தாண்டுகளில் கூடியது வெறும் 150 நாள்கள் மட்டுமே என்கிறது. 1952-க்குப் பிறகு சட்டப்பேரவை முழுப் பதவிக்காலத்துக்கான மிகக் குறைந்த எண்ணிக்கை இது; சராசரியாக ஆண்டுக்கு 32 நாள்கள் மட்டுமே. இந்தக் குறுகிய காலத்தில் 194 மசோதாக்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டன; ஒன்றைக்கூடக் குழு ஆய்வுக்கு அனுப்பவில்லை. ஆக்கபூர்வமான செயல்பாட்டில் எத்தகைய வீழ்ச்சி? என்பதை இது காட்டுகிறது.

அண்டை மாநிலமான கேரளம் ஆண்டுக்குச் சராசரியாக 50 நாள்கள் பேரவையைக் கூட்டியிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு, ஆண்டுக்குக் குறைந்தது 100 நாள்களேனும் பேரவை கூடும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது; நிறைவேறியது, அதில் மூன்றில் ஒரு பங்குகூட இல்லை. இன்னும் ஓர் உண்மை உறுத்துகிறது- தனி நபர் மசோதா புறக்கணிக்கப்பட்ட பல பிரச்னைகளை அவையின் கவனத்துக்கு கொண்டுவருகிறது. 1991-க்கு பின்னர் இது இல்லாமல் போய்விட்டது என்று ஆய்வாளர்கள் சிலர் கூறுகிறார்கள். இத்தகைய முயற்சிகள் எதுவுமே இல்லாமல் உறுப்பினர்கள் தம் சொந்தச் சிந்தனையை இழந்து, கட்சி இயக்கும் பொம்மைகளாகச் சுருங்கிவிட்டனர் என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?

சட்டப்பேரவை உரைகளின் உள்ளடக்கத்தை ஆராய்ந்து பார்ப்பதும் இங்கு அவசியமாகிறது. கருத்தை வெளிப்படுத்துவதில் தர்க்கம் (லாஜிக்) முதுகெலும்பு போன்றது. அது இல்லாதபோது, பேச்சு நூல் இல்லாமல் நெசவு செய்வதைப் போலாகிவிடுகிறது. என்ன பேசுகிறோம்? என்பதை உணராமல் வெறும் உணர்ச்சிகளை மட்டும் கொட்டுகிறார்கள்; அறியாமலேயே அநாகரிகச் சொற்கள் வந்து விழுகின்றன. துறை சார்ந்த ஆழமின்மையால், எங்கே முடிப்பது? என்று தெரியாமல் பலர் விழிபிதுங்கி நிற்கிறார்கள். மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்களைப் பதிவு செய்வதற்குப் பதிலாகத் தனிநபர் தாக்குதலிலேயே நேரம் கழிகிறது. தொகுதியின் கோரிக்கைகள் குறித்து எந்த முன்னாய்வும் செய்யாமல் வந்து மனப்போக்கில் பேசுகிறார்கள். தம் பிரதிநிதி தமக்காகக் குரல் கொடுப்பார் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு இது வெறும் ஏமாற்றமாகிறது; மக்களாட்சியின் மீதான நம்பிக்கை குறையத் தொடங்குகிறது.

வரவு-செலவுத் திட்டமும் மானியக் கோரிக்கைகளும் விவாதிக்கப்படும் நேரத்தில்கூட, மக்கள் பிரச்னைகளைப் பேசுவதற்குப் பதிலாக, விசுவாசத் தலைவர்களைப் புகழ்ந்து பாடுவதிலேயே பெரும் நேரம் கரைந்து போகிறது. தம் தகுதி குறித்துத் தமக்கே சந்தேகம் எழும்போது, உறுப்பினர்களே கட்சி புராணத்தை விட்டு, தம் சுயபுராணங்களைப் பாடத் தொடங்குகிறார்கள்; சில நேரங்களில் அந்தப் புராணங்களைச் சகித்துக்கொள்ளவே முடிவதில்லை. இதைப் போலவே வெளிநடப்புக் கலாசாரமும் பெருகிவிட்டது.

குடிமக்கள் மாண்புக்குரியவர்கள் என்கிறது அரசமைப்புச் சட்டம்; அவர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களும் மாண்புக்குரியவர்களே. அந்த மாண்பைக் காக்கும் கண்ணியம் இன்று அவையில் இருக்கிறதா என்ற கேள்வியையும் ஆராய வேண்டும். இதை மாற்றியமைக்கும் புதிய கருதுகோள்களை நாம் உருவாக்க வேண்டும்.

ஊழலற்ற ஆட்சி என்ற வாக்குறுதியுடன் பொறுப்பேற்றுள்ளது புதிய அரசு. வரலாற்றில் இளைய உறுப்பினர்களை அதிகம் கொண்ட சட்டப்பேரவை.

ஒரு நல்ல தொடக்கம் ஏற்கெனவே நிகழ்ந்துள்ளது- சட்டப்பேரவை நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பு. தன் பிரதிநிதி என்ன பேசினார், எத்தனை நாள் வந்தார் என்பதை மக்கள் நேரடியாகக் காணும்போது, அவர்களே மக்களாட்சியின் கண்காணிப்பாளர் ஆகிறார்கள். இதை மசோதாக்கள், குழு அறிக்கைகள், வருகைப் பதிவு வரை விரிவாக்கினால், ஒவ்வொரு வீடும் ஒரு சட்டப்பேரவையாக விவாதிக்கத் தொடங்கி விடும்.

இனி செய்ய வேண்டியவை தெளிவானவை. இதில் முதன்மையானது நிலைக் குழுக்கள், கூட்டுக் கலந்தாய்வின் மூலம் மசோதாக்களை ஆய்வுக்கு உட்படுத்தி, ஆட்சி நிர்வாகத்துக்கும் சட்டப்பேரவைக்கும் இடையே உயிர்ப்புள்ள இணைப்பை உருவாக்க வேண்டும்.

பேரவையில் மேலும் சில சீர்த்திருத்தங்கள் தேவை. ஆண்டுதோறும் பேரவை கூடும் நாள்களை அதிகரிக்க வேண்டும். பொதுக் கணக்குக் குழு, தலைமைக் கணக்காயர் அறிக்கைகள் மீதான தெளிவும் புரிதலும் அவை உறுப்பினர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளில் அவர்கள் உயிர்ப்புடன் பங்கேற்க வேண்டும். அரசுப் பணத்தின் மீதான உண்மையான கண்காணிப்பு இது என்பதை யாரால்தான் மறுக்க முடியும்?

சட்டப்பேரவைத் தலைவர் பேரவையின் உட்கரு போன்றவர்; அவரது நடுநிலை குறித்து உலகெங்கும் பல்வேறு மரபுகள் உண்டு. பிரிட்டிஷ் நாடாளுமன்ற மரபில், ஒரு கட்சியின் சார்பில் தேர்வுபெறும் நாடாளுமன்றத் தலைவர், தேர்வான உடனேயே அந்தக் கட்சி உறுப்பினர் என்ற நிலையிலிருந்து விலகிவிடுவார். உலகில் பல நாடுகளில் இந்த மரபு வேறு வகையில் காணப்படுகிறது.

தமிழக வரலாற்றில் பேரவைத் தலைவர்களின் வெளிப்படையான கட்சிச் சார்பு பல நேரம் பேரவைக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது; முதல்வர்களின் கண்ணசைவிலேயே அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். இதிலிருந்து மாறுபட்டு, இன்றைய பேரவைத் தலைவர் சுதந்திரமாகச் செயல்படுகிறார். இதில் தமிழக முதல்வரின் ஜனநாயக அணுகுமுறை பாராட்டுக்குரியது.

21-ஆம் நூற்றாண்டு மாற்றங்களின் வெள்ளப்பெருக்கு போன்றது. ஒருபுறம் கற்பனைக்கு எட்டாத தொழில்நுட்ப வளர்ச்சி; மறுபுறம் இயற்கை வளங்களையும் மனித உழைப்பையும் சூறையாடும் லாப வெறி. இவற்றுக்குக் கடிவாளம் போடும் ஒரே பேராயுதம் மக்களாட்சிதான். இந்த ஆயுதம் ஏந்திய மக்கள், கடந்த கால வரலாற்றில் பல மாற்றங்களைச் செய்து காட்டியிருக்கிறார்கள். இதே பாதையில் மக்களாட்சியின் மாண்புகளை உயர்த்திப் பிடிக்கும் தூயமணி விளக்காக தமிழநாடு சட்டப்பேரவை வழிகாட்ட வேண்டும். எந்த விளக்கையும் ஏற்றுவது எளிது. அணையாமல் பாதுகாப்பதே கடினம். அதை நிகழ்த்திக் காட்டும் வாய்ப்பு, இப்போது கைகூடி வந்திருக்கிறது என்றே நம்புகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments