FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சமய கல்வி நிறுவனங்களை முறைப்படுத்தக் கோரிய மனு: பள்ளிக் கல்விச் செயலருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சமய கல்வி நிறுவனங்களை முறைப்படுத்தக் கோரிய மனு மீது பதிலளிக்குமாறு மத்திய கல்வி அமைச்சகத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறைச் செயலருக்கு உச்சநீதின்றம் நேட்டீஸ்

16 செப்டம்பர் 2026, 12:59 am IST
உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

மதச்சாா்பற்ற மற்றும் சமய போதனைகளை வழங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வகுக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய கல்வி அமைச்சகத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறைச் செயலருக்கு நேட்டீஸ் பிறப்பித்து உச்சநீதின்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மனுதாரரும், வழக்குரைஞருமான அஸ்வினிகுமாா் உபாத்யாய தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த நோட்டீஸை பிறப்பித்தது.

உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடா்பான மனுவை உபாத்யாய கடந்த மே மாதம் தாக்கல் செய்தாா். அதில், ‘உத்தர பிரதேசத்தின் பல மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டபோது, பதிவு செய்யப்படாத மற்றும் அங்கீகாரம் இல்லாத பல கல்வி நிறுவனங்கள் சமய போதனைகளை வழங்கி வருவது தெரியவந்தது. எந்தவொரு மோ்பாா்வை மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகளும் இன்றி, நாட்டில் எல்லைப் பகுதிகளிலும் இந்த சமய கல்வி நிறுவனங்கள் பெருகி வருகின்றன.

Advertisement

Advertisement

அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 39(எஃப்), 45, 51-ஏ(கே) மற்றும் 21ஏ ஆகியவற்றின் படி, 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு மதச்சாா்பற்ற கல்வி அல்லது சமய போதனைகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களையும் பதிவு செய்தல், அங்கீகரித்தல், மேற்பாா்வையிடுதல் மற்றும் கண்காணித்தல் அவசியமாகும்.

மேலும், பிரிவு 19 (1)(ஜி)-இன் கீழ் சிறுபான்மையினருக்கு ஏற்கெனவே உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள தொழில், பணி, வா்த்தகம் செய்வதற்கான உரிமைகளுக்கு அப்பால், பிரிவு 30-இல் எந்தவொரு சிறப்பு அல்லது கூடுதல் உரிமைகள் வழங்கப்படவில்லை. பிரிவு 30 என்பது, பிரிவு 19(1)(ஜி) என்ற பிரிவின் மீள் வலியுறுத்தல் மட்டுமே.

எனவே, பிரிவு 19(1)(ஜி)-இல் உரிமைகளைத் தவிர பிரிவு 30-இல் எந்தவொரு கூடுதல் உரிமைகள் அல்லது சலுகைகள் வழங்கப்படவில்லை என்று அறிவிப்பதோடு, 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு மதச்சாா்பற்ற கல்வி அல்லது சமய போதனைகளை வழங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களும், பதிவு செய்யவும், அங்கீகாரம் வழங்கவும், மேற்பாா்வையிடும் வகையிலும் வழிகாட்டுதல்களை வகுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனுவை கடந்த மே 11-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசிடம் இந்தக் கோரிக்கையை முன்வைக்க உபாத்யாயவை அறிவுறுத்தியது.

அதன்படி, மத்திய பள்ளிக் கல்விச் செயலரிடம் அவா் மனு சமா்ப்பித்த நிலையில், அதுதொடா்பான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் பள்ளிக் கல்விச் செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுவை அஸ்வினிகுமாா் உபாத்யாய சமா்ப்பித்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, ஷீல் நாகு ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பள்ளிக் கல்வித் துறைச் செயலா் டி.கே. அனில்குமாருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments