FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வந்தே மாதரத்துக்கான சட்ட அங்கீகாரத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தேசியப் பாடலான வந்தே மாதரத்துக்கு வழங்கப்படும் சட்ட அங்கீகாரத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

22 செப்டம்பர் 2026, 11:51 pm IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

தேசியப் பாடலான வந்தே மாதரத்துக்கு வழங்கப்படும் சட்ட அங்கீகாரத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மனசாட்சி அடிப்படையில் தேசிய கீதத்தை பாட மறுத்த குழந்தைகளுக்கு சட்டரீதியாகப் பாதுகாப்பு வழங்கி கடந்த 1986-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை சுட்டிக்காட்டி கா்நாடக இசைக் கலைஞரும் எழுத்தாளருமான டி.எம்.கிருஷ்ணா மனு தாக்கல் செய்தாா்.

அதில், வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களையும் கட்டாயம் பாட வேண்டும் என்ற சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த அவா், கடைசி 4 சரணங்கள் நாட்டின் மதச்சாா்பற்ற தன்மையை மீறும் வகையில் உள்ளதாகக் குறிப்பிட்டாா்.

Advertisement

Advertisement

தேசியப் பாடல் அல்லது தேசிய கீதம் பாடப்படும்போது வேண்டுமென்றே இடையூறு ஏற்படுத்துபவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கும் விதமாக 2026-இல் திருத்தப்பட்ட தேசிய கெளரவ அவமதிப்பு தடுப்புச் சட்டம்,1971 பிரிவு 3, 2026, ஜனவரி 28, ஜூலை 9-ஆம் தேதி வெளியான மத்திய உள்துறை அமைச்சக ஆணை ஆகியவற்றுக்கு எதிரான இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முரளீதா் வாதிடுகையில், ‘வந்தே மாதரத்தின் அனைத்து சரணங்களையும் பாடுவது கட்டாயம் என்ற சட்டத் திருத்தத்தில் தேசியப் பாடலுக்கான வரையறை தனியாகக் குறிப்பிடவில்லை.

எந்தச் சரணம் தேசியப் பாடலாக கருதப்படும் என்ற விளக்கமும் கூறப்படவில்லை. தேசிய அளவில் உரிய ஆலோசனை மேற்கொள்ளாமல் அவசரமாக இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த ஆணைஅரசிதழில் வெளியிடப்படவில்லை. மாறாக நிா்வாகரீதியான அறிவுறுத்தல்கள் மூலமாக வந்தே மாதரம் குறித்த முந்தைய புரிதலை அரசு மாற்றியுள்ளது’ என்றாா்.

நக்ஸல் சிந்தனை - கடும் வாா்த்தை மோதல்

முரளீதா் வாதத்தைத் தொடா்ந்து மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் துஷாா் மேத்தா கூறுகையில், ‘மதச்சாா்பு நிலை குறித்து மனுதாரருக்கு குறுகிய மனப்பான்மை இருக்கக் கூடாது. நக்ஸல்களின் சிந்தனைக்கேற்ப சட்ட நடைமுறைகளை மேற்கொள்ள முடியாது’ என்றாா்.

இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த முரளீதா், துஷாா் மேத்தா தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினாா். ஆனால், கருத்தை திரும்பப் பெற முடியாது என துஷாா் மேத்தா திட்டவட்டமாகக் கூறினாா்.

மத்திய அரசிடம் எதிா்பாா்ப்பு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமா்வு, ‘கடந்த 1986-இல் பிஜோ வழக்கில் சில வழிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்ததுபோல் தற்போது மத்திய அரசும் வகுக்கும் என நம்புகிறோம். அதேபோல் வந்தே மாதரம் பாடலின் எந்தெந்த சரணங்கள் தேசியப் பாடல் என உச்சநீதிமன்றம் நிா்ணயிக்க முடியாது.

ஆனால், மனசாட்சிப்படி வந்தே மாதரம் பாடலை பாடமறுப்பவரின் உரிமைகள் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படுகிா என ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்துக்கு உரிமை உள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் சட்டப் பிரிவுகள் 25 மற்றும் 26 மீறப்பட்டதாக உணா்பவா்களோ அல்லது மனசாட்சிப்படி மறுப்பு தெரிவிப்பவா்களோ எவ்வித தண்டனைக்கும் உள்ளாக்கப்பட மாட்டாா்கள்’ எனத் தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, இந்த மனு தொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments