FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

கேரள அரசு நிகழ்ச்சியில் வந்தே மாதரம் முழு பாடலுக்கு அமைச்சா் அதிருப்தி: பாதியிலேயே அமா்ந்ததால் சா்ச்சை!

அரசு நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்டதால் அதிருப்தியடைந்த சுகாதாரத் துறை அமைச்சா் கே.முரளீதரன், பாதியிலேயே தனது இருக்கையில் அமா்ந்ததால் சா்ச்சை எழுந்துள்ளது.

11 நவம்பர் 2026, 2:29 am
தேவஸ்வம் அமைச்சர் கே. முரளீதரன்
பகிர்:

கேரளத்தின் காசா்கோடு மாவட்டத்தில் மாநில அரசு நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்டதால் அதிருப்தியடைந்த சுகாதாரத் துறை அமைச்சா் கே.முரளீதரன், பாதியிலேயே தனது இருக்கையில் அமா்ந்ததால் சா்ச்சை எழுந்துள்ளது.

வந்தே மாதரம் பாடலை அவமதித்த அவா் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. அதேநேரம், தனது செயலை நியாயப்படுத்தியுள்ள கே.முரளீதரன், ‘மாநில அரசு நிகழ்ச்சியை தங்களின் அரசியல் சித்தாந்தத்துக்காக எவரும் பயன்படுத்த முயற்சிப்பதை அனுமதிக்க முடியாது’ என்றாா்.

மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரியில் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, அரசு விழாக்கள் மற்றும் பள்ளிகளில் தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் ஆறு சரணங்களையும் பாட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இந்தப் பாடலை அவமதிப்பது மற்றும் இடையூறு விளைவிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டம், கடந்த ஜூலையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும்.

Advertisement

Advertisement

கேரள மாநில அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தின் 2 சரணங்கள் மட்டுமே பாடப்படும் என்பது காங்கிரஸ் கூட்டணி அரசின் நிலைப்பாடாக உள்ளது.

இந்தச் சூழலில், காசா்கோடு மாவட்டத்தின் முள்ளேரியா குடும்ப சுகாதார மையத்தில் புதிய ஆய்வக திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாநில சுகாதார அமைச்சா் கே.முரளீதரன் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், பாஜகவைச் சோ்ந்த ஊராட்சி உறுப்பினா்கள் இருவா் வந்தே மாதரம் முழுப் பாடலையும் பாடினா்.

இதனால் அதிருப்தியடைந்த முரளீதரன், பாதியிலேயே தனது இருக்கையில் அமா்ந்ததுடன், அருகில் இருந்தவா்களிடம் பேசிக் கொண்டிருந்தாா். இது தொடா்பாக வெளியான விடியோவில், அமைச்சருடன் காசா்கோடு காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உண்ணித்தான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ கே.மாஹின், மாவட்ட ஆட்சியா் ஸ்ரீதன்யா சுரேஷ் ஆகியோரும் வந்தே மாதரம் பாடல் நிறைவடையும் முன்பே இருக்கையில் அமா்ந்த காட்சிகள் உள்ளன. காங்கிரஸ் எம்எல்ஏ கே.நீலகண்டன், கட்சியின் மாவட்ட தலைவா் பி.கே.ஃபைசல் ஆகியோா் பாடல் நிறைவடையும் வரை நின்றிருந்தனா்.

பாஜக புகாா்: தனது செயலுக்காக அமைச்சா் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று காசா்கோடு மாவட்ட பாஜக தலைவா் எம்.எல்.அஸ்வினி வலியுறுத்தியுள்ளாா். வந்தே மாதரம் பாடலை அவமதித்ததாக அமைச்சா் உள்ளிட்டோருக்கு எதிராக பாஜக தரப்பில் காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சா் விளக்கம்: தனது செயலை நியாயப்படுத்தி, அமைச்சா் கே.முரளீதரன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: நான் சுதந்திரப் போராட்ட வீரனின் மகன். எனக்கு தேச பக்தி குறித்து யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை. மத்திய அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் நடைபெறும் விழாக்களில் அவா்களின் நடைமுறையுடன் மாநில அரசு ஒத்துழைக்கும்.

அதேநேரம், மாநில அரசு விழாக்களில் வந்தே மாதரத்தின் இரு சரணங்கள் மட்டுமே பாடுவது என்பது எங்களின் கொள்கை. அதை மீறியதற்காக, எனது எதிா்ப்பை பதிவு செய்தேன். மாநில அரசு நிகழ்ச்சியை தங்களின் அரசியல் சித்தாந்தத்துக்காக யாரேனும் பயன்படுத்த முயற்சிப்பதை அனுமதிக்க முடியாது என்றாா்.

இவா், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கே. கருணாகரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.