தேசியப் பாடலை போற்றுவோம்!
அந்நியத் துணிகளைப் புறக்கணித்து எரித்தல், வந்தே மாதரம் என எழுச்சி முழக்கமிடுதல் உள்ளிட்ட போராட்டங்கள் வங்காளத்தில் தீவிரமாக நடைபெற்றன.
வங்கப் பிரிவினையை எதிர்த்து நடைபெற்ற போராட்டக் காலத்தில், ஒட்டுமொத்த வங்க மக்களின் எழுச்சி முழக்கமாக "வந்தே மாதரம்' பாடல் திகழ்ந்தது. அக்காலகட்டத்தில், அது வங்கத்தின் தேசிய கீதமாகவே முழங்கியது என்பது வரலாறு.
இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபு, நிர்வாக வசதியைக் காரணமாகக் கூறி, வங்காள மாகாணத்தை ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த மேற்கு வங்கம் என்றும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த கிழக்கு வங்கம் என்றும் பிரித்தார். இந்தப் பிரிவினை
1905-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. ஹிந்து -முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்தி, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்வதே கர்சன் பிரபுவின் உண்மையான நோக்கம் என்பதைப் புரிந்துகொண்ட ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் அதை எதிர்த்துக் கிளர்ச்சியில் இறங்கினர். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையைவிட அதிகமான எதிர்ப்பு கிளம்பியது. வங்கப் பிரிவினைக்கு எதிராக சுதேசி இயக்கம் தீவிரமடைந்தது. அந்நியத் துணிகளைப் புறக்கணித்து எரித்தல், வந்தே மாதரம் என எழுச்சி முழக்கமிடுதல் உள்ளிட்ட போராட்டங்கள் வங்காளத்தில் தீவிரமாக நடைபெற்றன. மக்களின் தொடர் எதிர்ப்பைத் தொடர்ந்து, வங்கப் பிரிவினையை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. 1911-ஆம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் வங்கப் பிரிவினையை ரத்து செய்வதாக அறிவித்தார் என்பது வரலாறு.
Advertisement
Advertisement
வங்காள எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி 1875-ஆம் ஆண்டு வந்தே மாதரம் பாடலை இயற்றினார். பின்னர், அவர் எழுதிய "ஆனந்த மடம்' நாவலிலும் இந்தப் பாடல் இடம்பெற்றது. வந்தே மாதரம் பாடலில் துர்கை, கமலா, வாணி ஆகிய மூன்று ஹிந்து தெய்வங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதால், இஸ்லாமிய சமுதாயத்தில் இதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. அதுவரையில் எல்லா காங்கிரஸ் கூட்டங்கள், மாநாடுகளின் தொடக்கத்திலும் தேசிய கீதமாகக் கருதி "வந்தே மாதரம்' பாடப்பட்டது. எதிர்ப்பைத் தொடர்ந்து, மத ரீதியாக விடுதலைப் போராட்டம் வலுவிழந்துவிடக் கூடாது என்று அண்ணல் காந்தி முடிவெடுத்தார். ஹிந்து தெய்வங்களின் பெயர்கள் இடம்பெறாத முதல் இரண்டு பத்திகளை மட்டும் பயன்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
ஒரு காலத்தில் மாவீரன் பகத் சிங், "இன்குலாப் ஜிந்தாபாத்' என்ற முழக்கத்தை எழுப்பினார். அது இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான மக்கள் முழக்கமாகத் திகழ்ந்தது. இதேபோல "வந்தே மாதரம்' என்ற முழக்கமும் அன்றைய பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிரான வலிமையான எழுச்சி முழக்கமாகத் திகழ்ந்தது. 1932-ஆம் ஆண்டு திருப்பூர் குமரன் ஆங்கிலேயர்களின் தடியடிக்கு உள்ளானபோது, தேசியக் கொடியை இறுகப் பற்றியபடியே "வந்தே மாதரம்' என முழங்கியவாறு உயிர்நீத்தார். இதேபோல், வ.உ.சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் "வந்தே மாதரம்' என்று முழங்கியவாறே கைது செய்யப்பட்டனர். மராட்டியத்தில் பாலகங்காதர திலகர் "வந்தே மாதரம்' என்று முழங்கிய பின்னர், "சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று பிரகடனப்படுத்தினார்.
"தாய் மண்ணே வணக்கம்' எனப் பொருள்படும் வந்தே மாதரம் என்பதை மத ரீதியாகப் பார்ப்பதைவிட, பாரத விடுதலைக்கான முழக்கமாகவும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான எழுச்சி முழக்கமாகவும் பார்ப்பதுதான் சரியான பார்வையாக இருக்க முடியும்.
"வந்தே மாதரம்' என்ற முழக்கத்தை உரக்க எழுப்பும்போது, அதை முழங்குபவருக்குத் தனது மூச்சிலேயே ஒரு புதிய சக்தி பிறப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டு, மேலும் மேலும் முழக்கமிடத் தூண்டியது. இதுவே அந்த முழக்கத்தின் எழுச்சி ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
1920-களில், மகாகவி பாரதியார் வாழ்ந்த காலத்தில், தாகூரின் "ஜன கண மன' பாடல் மக்களிடையே பரவலாக அறிமுகமாகவில்லை. ஆனால், வந்தே மாதரம் பாடலைப் பாரதியார் இரண்டு முறை தமிழில் மொழிபெயர்த்தார். "பாரத மக்கள் அனைவருக்குமான பாடலாக அதைத் தமிழில் மொழியாக்கம் செய்தார்.
தெய்வப் பெயர்களை மட்டுமல்லாமல், சமயங்களைக் கடந்து மக்களால் நேசிக்கப்பட்ட கலைஞர்களும் தமிழ்நாட்டில் இருந்துள்ளனர். ஷேக் சின்ன மெüலானா என்ற நாகஸ்வர மேதையின் இசை ஒலிக்காத கோயில்களே இல்லை என்று கூறும் அளவுக்கு, அவரது நாகஸ்வர இசை புகழ்பெற்றது. ஆந்திரத்தில் பிறந்திருந்தாலும், ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து மறைந்தார். ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாகஸ்வர இசைக்கான அவரது சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி, அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு சிறப்பித்தது.
இதேபோல், கே.ஜே. யேசுதாஸ் ஒரு கிறிஸ்தவர். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் பாடியுள்ள அவர், சபரிமலை ஐயப்பன் குறித்து பாடிய பாடல்களால் மிகவும் பிரபலமானவர். பத்மபூஷண் விருது வழங்கி
இந்தியா அவரை கெüரவப்படுத்தியது. அவரது குரல் வளத்தில் மயங்காதவர்கள் யாருமே இல்லை என்று கூறும் அளவுக்கு, அவரது இசைக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
மதத்தைக் கடந்து சென்று காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஆஸ்தான வித்வானாக, நாள்தோறும் அந்தக் கோயிலில் அதிகாலை ஷேக் பிஸ்மில்லா கான் மனமுருகி இசைக்கும் ஷெனாய் இசையைக் கேட்பதற்காகவே பலர் அதிகாலையில் தரிசனத்துக்கு வருவார்கள்.
இஸ்லாமியர் என்பதால் ஆலய நிர்வாகம் தமது ஆஸ்தான வித்வானான பிஸ்மில்லா கானைப் புறந்தள்ளிவிடவில்லை. மாறாக, அவர் "பத்ம விபூஷண்' விருது வழங்கி கெüரவிக்கப்பட்டிருக்கிறார்.
"வந்தே மாதரம்' பாடலையும் சுதந்திரப் போராட்டத்தின் எழுச்சி முழக்கமாகப் பார்க்க வேண்டுமே தவிர, அதை மதம் சார்ந்து பார்ப்பது நியாயமானதா என்ற கேள்வியையும் சிந்திக்கக் கடமைப்பட்டு இருக்கிறோம்.
"வந்தே மாதரம்' பாடலை இயற்றிய பங்கிம் சந்திர சட்டர்ஜி, ஹிந்து மதத்தைப் பரப்புவதற்காக இந்தப் பாடலை எழுதவில்லை. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்புவதற்காகவே அவர் இப்பாடலை இயற்றினார் என்ற கருத்தை நினைவில் கொள்ள வேண்டும்.
"வந்தே மாதரம்' என்பது ஒரு காலத்தில் சுதந்திரப் போராட்டத்தின் எழுச்சி முழக்கமாகத் திகழ்ந்தது என்பதற்குப் பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் காலனி நாடாக இருந்த இந்தியாவில், பிரிட்டிஷ் பேரரசைச் சேர்ந்த அரசக் குடும்பத்தினரைப் போற்றிப் பாடும் பாடல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட காலகட்டமும் இருந்தது. இந்தச் சூழலில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தேசிய உணர்வைத் தூண்டும் வகையில் பங்கிம் சந்திர சட்டர்ஜி வந்தே மாதரம் பாடலை இயற்றினார் என்பது நினைவுகூரத் தக்கது.
பிஸ்மில்லா கானையும், ஷேக் சின்ன மெüலானாவையும், யேசுதாûஸயும் அவர்களது மத அடையாளங்களைக் கடந்து, அவர்களின் இசைத் திறமையைப் பாராட்டி வரவேற்கிறோம். அதுபோல, வந்தே மாதரம் பாடலையும் அதன் வரலாற்றுப் பின்னணியையும், தேசிய உணர்வையும் கருத்தில் கொண்டு வரவேற்க வேண்டும்.
வந்தே மாதரம் பாடலின் வரலாற்றுப் பின்னணியை நினைவுகூரும் வகையில், மத்திய அரசு 2026-ஆம் ஆண்டில் சட்டத் திருத்தம் மேற்கொண்டது. அதன்மூலம், தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடப்படுவதைத் திட்டமிட்டு தடுப்பது அல்லது அது பாடப்படும் நிகழ்வில் இடையூறு செய்வது குற்றமாக்கப்பட்டு, அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, 22.09.2026 அன்று உச்சநீதிமன்றம் முக்கியமான கருத்துகளைத் தெரிவித்தது. மதம் அல்லது மனசாட்சியின் அடிப்படையில் வந்தே மாதரம் பாட மறுக்கும் ஒருவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்திருப்பது வரவேற்புக்குரிய அறிவுறுத்தல்.
"வந்தே மாதரம்' பாடலில் இடம்பெற்றுள்ள ஹிந்துக் கடவுள்களின் பெயர்களைச் சுட்டிக்காட்டி, அதைப் பாட மறுக்கும் இஸ்லாமியர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், "அல்லா' என்று ஏக இறைவனை வணங்கும் நாங்கள் "வந்தே மாதரம்' என்று தாய் மண்ணை வணங்க முடியாது என்று முன்வைக்கும் வாதம் (பிடிவாதம்) தவறானது; மதம் நம்பிக்கை சார்ந்தது; தேசப் பற்று என்பது பிறப்பு சார்ந்தது; மரபணு சார்ந்தது.
இன்றைய காலகட்டத்தில் நமது மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று தேசப் பற்று. குழந்தைகள்முதல் முதியவர்கள் வரை அனைவரிடமும் நாட்டின் மீதான அன்பும் பொறுப்புணர்வும் வலுப்பெற்றால், நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் அது துணை நிற்கும்.
இந்திய ராணுவத்தினரிடம் காணப்படும் நாட்டுப் பற்றை நாம் அறிந்திருக்கிறோம். அதேபோல், நாட்டின் ஒவ்வொரு குடிமகனிடமும் தேசப்பற்றும் தேசியப் பொறுப்புணர்வும் வலுப்பெற வேண்டும்.
கட்டுரையாளர்:
முன்னாள் ஆசிரியர், ஓம் சக்தி இதழ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.