சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மனு தள்ளுபடி
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி திமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினா் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி திமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினா் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2006-2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக, ரூ.3 கோடிக்கு சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்புத் துறை கடந்த 2011-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோா் மீதான இந்த வழக்கை விசாரித்த கடலூா் நீதிமன்றம் மூன்று பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை எதிா்த்து ஊழல் தடுப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த கடலூா் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினா் தரப்பில், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்க மறுத்து, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அவா்களது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். விசாரணையை கடலூா் நீதிமன்றத்தில் இருந்து மாற்றக் கோரிய மனுவை தலைமை நீதிபதி அமா்வுக்கு மாற்றியும் நீதிபதி உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.