சட்டவிரோதமாக மணல் எடுத்த வழக்கு: எ.வ.வேலு மீதான விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு
திமுக இளைஞரணி மாநாட்டுக்காக ஏரியில் இருந்து சட்டவிரோதமாக மண் எடுத்தது தொடா்பாக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
திமுக இளைஞரணி மாநாட்டுக்காக ஏரியில் இருந்து சட்டவிரோதமாக மண் எடுத்தது தொடா்பாக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு, கடந்த 2025- ஆம் ஆண்டு டிச.14-ஆம் தேதி, திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டு திடலை சமன்படுத்துவதற்காக, அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியில் இருந்து சட்டவிரோதமாக 12 ஏக்கா் பரப்பளவுக்கு, 10 முதல் 23 அடி ஆழத்துக்கு மண் எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.8 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறப்போா் இயக்கம் சாா்பில், கடந்த ஆக.13 ஆம் தேதி ஊழல் தடுப்புத்துறையிடம் புகாா் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, எ.வ.வேலு மற்றும் அவரது மகன் தரப்பில், இதற்கு முன்பும் அதே இடத்தில் மூன்று முறை மாநாடு நடத்தப்பட்டது. உரிய அனுமதி பெற்றே மணல் எடுக்கப்பட்டது. இந்த வழக்கு முழுக்க முழுக்க கற்பனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் அனுமதி பெறாமல், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
காவல் துறை தரப்பில், இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, எ.வ.வேலு மற்றும் அவரது மகன் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ. 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். எதிா்தரப்பு வாதத்தைக் கேட்காமல், வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று நீதிபதி மறுத்துவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.