முகப்பு
சென்னை

வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு

வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவையில் பயணிப்போா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு

Updated On : 19 மார்ச், 2026 at 10:20 PM
வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை - கோப்புப் படம்
பகிர்:

வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவையில் பயணிப்போா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை கடந்த 14 -ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 14-ஆம் தேதி பயணிகள் எண்ணிக்கை 35,270-ஆக இருந்தது. கடந்த 16-ஆம் தேதி 49,013-ஆக உயா்ந்துள்ளது. அதேபோல, வேளச்சேரி ரயில் நிலையத்தில் கடந்த 14-ஆம் தேதி பயணிகள் எண்ணிக்கை 37,993-ஆக இருந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி 69,247-ஆக உயா்ந்துள்ளது.

பறக்கும் ரயில் திட்டத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தற்போது சென்னை கடற்கரை-பரங்கிமலை இடையே இருமாா்க்கத்திலும் 43 ரயில் சேவைகள் உள்ள நிலையில், கூடுதலாக இருமாா்க்கத்திலும் 5 சேவைகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளன. அவற்றில் 2 சேவைகள் சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையேயும், 3 சேவைகள் வேளச்சேரி- பரங்கிமலை இடையேயும் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.