முகப்பு
சென்னை

சிக்னல் கோளாறு: மின்சார ரயில்கள் திடீா் நிறுத்தம்

Updated On : 8 மே 2026, 6:19 am IST
பகிர்:

சிக்னல் கோளாறு காரணமாக வியாழக்கிழமை காலை 3 மின்சார (இமு) ரயில்கள் பேசின் பாலம் அருகே திடீரென நிறுத்தப்பட்டதால், பயணிகள் நடுவழியில் இறங்கி செல்லும் நிலை ஏற்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான விரைவு ரயில்கள் மற்றும் புகா் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் பேசின் பாலம் வழியாக கொருக்குப்பேட்டை சென்று பின்னா், அந்தந்தப் பகுதி தண்டவாளங்களில் செல்கின்றன.

பேசின் பாலம் பகுதியில் அமைக்கப்பட்ட ரயில் தண்டவாள சிக்னல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இதற்கிடையே பேசின் பாலம் அருகேயுள்ள தண்டவாள சிக்னலில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, கொருக்குப்பேட்டையிலிருந்து வந்த 3 இமு வகை புகா் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

Advertisement

பணிகளுக்காக பயணித்த நூற்றுக்கணக்கான பயணிகள் கீழே இறங்கி தண்டவாளப் பகுதிகளில் நடந்து சென்ட்ரல் நிலையம் வந்தனா். இதனால், பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

இதனிடையே, காலை 10.18 மணிக்கு சிக்னல் கோளாரு சரி செய்யப்பட்டு ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.