குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்
மதுராந்தகம் நகராட்சிக்கு உள்பட்ட காந்தி நகரில் குடிநீர் வசதி கோரி, காலிக் குடங்களுடன் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம் நகராட்சிக்கு உள்பட்ட காந்தி நகரில் குடிநீர் வசதி கோரி, காலிக் குடங்களுடன் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம் நகராட்சிக்கு உள்பட்ட 20-வது வார்டு பகுதியாக காந்தி நகர் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களுக்கு மதுராந்தகம் நகராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இப்பகுதி மக்களுக்கு போதுமான குடிநீரை நகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இப்பிரச்சனையைத் தீர்க்குமாறு நகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், நகராட்சி நிர்வாகம் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் மதுராந்தகம்-தச்சூர் சாலையில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மதுராந்தகம் சிறப்பு நிலை வட்டாட்சியர் ராஜேந்திரன், உதவி வட்டாட்சியர் துரைராஜ், மதுராந்தகம் காவல் உதவி ஆய்வாளர் எஸ்.தர்மலிங்கம் ஆகியோர் நேரில் சென்று, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேசிய சிறப்பு நிலை வட்டாட்சியர் ராஜேந்திரன், இன்னும் 2 நாள்களில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால் இப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.