பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு: இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பழங்குடியின விவசாயிகள் இலவச மின்இணைப்பு பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பழங்குடியின விவசாயிகள் இலவச மின்இணைப்பு பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தாட்கோ மூலம் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்துக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, விண்ணப்பதாரர்கள் பழங்குடியின விவசாயிகளாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விவசாயம் செய்யும் நிலம் விண்ணப்பதாரருக்குச் சொந்தமாகவும், அவரது பெயரில் நிலப்பட்டா இருத்தல் அவசியம். அந்நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அமைத்திருந்து, தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் http://fast.tahdco.com என்ற இணையதள முகவரியில் இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் விண்ணப்பதாரர் குறித்த விவரங்களுடன் ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ், கல்வித் தகுதி, வயதுச் சான்றிதழுக்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ், வாக்காளர் அட்டை, பான் அட்டை, ஆதார் அட்டை, மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை அதற்கான இடத்தில், குறிப்பிட வேண்டும். அத்துடன், விண்ணப்பதாரருக்குச் சொந்தமாக இருக்கும் நிலப்பட்டா மற்றும் சிட்டா அடங்கல் நகல், 'அ' பதிவேடு நகல், நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டதுக்கான நிலத்தின் வரைபடம், சர்வே எண், மின் வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல், கிணறு அமையப்பெற்ற கிராமம், மோட்டார் குதிரை திறன், சம்பந்தப்பட்ட மின் வாரிய கோட்டம் ஆகிய விவரங்களுடன் புகைப்படத்தையும் ஸ்கேன்செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், விவரங்களை பதிவு செய்யப்படும் இணையதள முகவரியிலேயே தெரிந்து கொள்ளலாம். இத்திட்டத்துக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுவோரின் வசதிக்காக அனைத்து தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகங்களிலும் ரூ. 20 செலுத்தி விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, பழங்குடியின விவசாயிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து இலவச மின்இணைப்பை பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.