மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி புக்கத்துறை கிராம மக்கள் மனு
மதுராந்தகம் வட்டம், புக்கத்துறை உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி பொதுமக்கள் குறைதீர் முகாமில் அக்கிராமத்தினர் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
மதுராந்தகம் வட்டம், புக்கத்துறை உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி பொதுமக்கள் குறைதீர் முகாமில் அக்கிராமத்தினர் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இது தொடர்பாக அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுராந்தகம் வட்டம், புக்கத்துறை ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி கடந்த 1973ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இதில், 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை திரளான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அதோடு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆண்டுதோறும் 90 சதவீதத்துக்கும் மேலாக தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு சுமார் 12 கி.மீ. தூரத்தில் உள்ள செங்கல்பட்டு அரசு, தனியார் மேல்நிலைப் பள்ளிகளுக்கு சென்று பயில வேண்டியுள்ளது. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசலில், ஆபத்தான முறையில் பேருந்துகளில் சென்று வரும் சூழல் உள்ளதால், பாதுகாப்பற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. பள்ளி வளாகத்திலேயே நபார்டு வங்கி உதவியுடன் சுமார் ரூ.1.55 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம், ஆய்வுக்கூடம், சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.
அவற்றை தமிழக முதலவர் கடந்த பிப்ரவரி 20இல் காணொலி முறையில் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
இந்நிலையில், பல்வேறு காரணங்களைக் காட்டி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் இப்பள்ளியைத் தரம் உயர்த்த ஆவன செய்ய மறுக்கிறது. எனவே, விரைந்து மேல்நிலைப்பள்ளி கட்டடத்தின் செயல்பாட்டைத் தொடங்கி வைக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.