புத்தாக்க அறிவியல் கண்காட்சி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வாலாஜாபாத் அரசு மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை புத்தாக்க அறிவியல் கண்காட்சியை ஆட்சியர் பா. பொன்னையா தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
வாலாஜாபாத் அரசு மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை புத்தாக்க அறிவியல் கண்காட்சியை ஆட்சியர் பா. பொன்னையா தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மையம் மூலம் 2016-17, 2017-18 ஆம் ஆண்டுக்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்காந கண்காட்சி நடைபெற்றது.
இக்கண்காட்சியை ஆட்சியர் பா.பொன்னையா தொடங்கி வைத்துப் பேசியதாவது: தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்பம் மையம் மூலம் பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆய்வு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாக்க அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றன. அதோடு, இக்கண்காட்சியில் சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய அளவில் நடத்தப்படும் அறிவியல் கண்காட்சிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அதன்படி, இக்கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக காட்சிப் பொருளை காட்சிப்படுத்துவார்கள். அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு,நகராட்சி, மெட்ரிக், கேந்திரிய வித்யாலயா ஆகிய பள்ளிகளில் பயிலும், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் 92 மாணவர்கள் பள்ளி அளவில் தேர்வு செய்யப்படுவர்.
பின்பு, அம்மாணவர்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்படுவர். அவர்களில், சிறந்த படைப்புகளை செய்யும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மையம் மூலம் 2016-17 ஆம் கல்வியாண்டுக்கு ரூ. 5 ஆயிரமும், 2017-18-ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான தொகை 10 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது. இத்தொகை மூலமாக அப்பள்ளிகளின் அறிவியல் ஆசிரியர்களின் உதவியுடன் அறிவியல் திறமையை வெளிப்படுத்தும் கண்காட்சிப் பொருளை தயாரித்து, புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் காட்சிப் பொருளாக பார்வைக்கு வைத்துள்ளனர்.
அவர்களில், முதல் பரிசு ஒரு நபருக்கும், 2 ஆம் பரிசு 2 நபருக்கும், மூன்றாம் பரிசு 3 நபருக்கும் ஆறுதல் பரிசாக 12 நபர்களுக்கும் என மொத்தம் 18 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட சிறந்த படைப்பாளர்கள் தேசிய அளவில் நடத்தப்படும் அறிவியல் கண்காட்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ஆண்டுதோறும் நடைபெறும் இக்கண்காட்சியை மாணவர்கள் தன் திறமைகளை வெளிப்படுத்த கிடைத்துள்ள ஒரு நல்ல வாய்ப்பாக எண்ணி, பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி, தேசிய புத்தாக்க அமைப்பு ரிஷி ராஜ் சர்மா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தயாளன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஏகாம்பரம், ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலர் (பயிற்சி) மகேஸ்வரி, அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.