பௌர்ணமி பூஜை நடத்தி கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர் கைது
பௌர்ணமி பூஜையில் தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரைத் தாக்கிய நபரை போலீஸார் புதன்கிழமை அதிரடியாக கைது செய்தனர்.
பௌர்ணமி பூஜையில் தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரைத் தாக்கிய நபரை போலீஸார் புதன்கிழமை அதிரடியாக கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், புதூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் பிரபாகரன், ஜானகி. இருவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனால், கோயிலுக்கு சென்றும், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கோயிலுக்கு சென்று வரும் இடத்தில் இத்தம்பதியருக்கு காஞ்சிபுரத்தை அடுத்த தாமரைத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த பாபு(40) என்பவரின் தொடர்பு கிடைத்துள்ளது. அவர் பெளர்ணமி பூஜை செய்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.
அதை நம்பிய தம்பதியர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தாமரைத்தாங்கல் கிராமத்தருகே உள்ள பழமையான வீட்டில் பூஜைக்காக சென்றனர். அப்போது பூஜையில் ஈடுபட்ட பாபு தம்பதியரை கண்களை மூடி பூஜை செய்யுமாறு கூறினார். அந்த நேரத்தில் பிரபாகரனின் மனைவி ஜானகி கழுத்தில் இருந்த 10 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.
பிரபாகரனைப் பிடிக்க முயன்றபோது, அவரைக் கல்லால் தாக்கி விட்டு பாபு தப்பியோடினார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாபுவை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், பிரபாகரனின் தலையில் பலமாக தாக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு இறந்தார். இதனால், அவரைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற பாபுவைப் பிடிக்க மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி உத்தரவிட்டார். அதன்பேரில், கிராமிய போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். பாபு செல்லிடப்பேசி எதையும் பயன்படுத்தாமல் இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர்.
இதையடுத்து, போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திண்டிவனம் அருகே சுற்றித் திரிந்த பாபுவை போலீஸார் மடக்கிப் பிடித்து புதன்கிழமை கைது செய்தனர்.