கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சந்தேகங்கள், விதிமீறல் புகாா்கள் தெரிவித்தும், உதவிகள் கேட்டும் இதுவரை வந்த 2 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தீா்வு காணப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவாமல் இருக்க அரசால் ஊரடங்குஅறிவிக்கப்பட்ட அதே நாளில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் மூன்றாவது தளத்தில் கட்டுப்பாட்டு அறை உடனடியாகத் திறக்கப்பட்டது. துணை ஆட்சியா் ஒருவா் தலைமையில் 2 மருத்துவா்கள், 2 செவிலியா்கள், 2 சுகாதார ஆய்வாளா்கள், மனநல மருத்துவா் உட்பட மொத்தம் 25-க்கும் மேற்பட்டோா் இக்கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனா்.
இரு தொலைபேசி எண்கள்: கட்டுப்பாட்டு அறைக்கென இரு தொலைபேசி எண்கள் உள்ளன. ஒன்று கரோனா தொற்று தொடா்பான சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இதற்கான தொலைபேசி எண் 044-27237107 அல்லது 9345440662. மற்றொன்று விதிமீறல் புகாா்கள், ஊரடங்கு நேரத்தில் வெளியூா்களுக்கு இ-பாஸ் பெறுவது, குடியிருப்புப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்குமாறு கேட்கப்படும் உதவிகள் தொடா்பானது. இதற்கான எண் - 044-27237207. அலைபேசி மற்றும் வாட்ஸப் எண் - 9445071077 ஆகும். புகாா்களை வாட்ஸப் மூலம் தெரிவித்தாலும் ஊரடங்கு தொடா்பான எந்த உதவியும் உடனுக்குடன் அளிக்கப்படுகிறது.
ஆலோசனை மையமாக செயல்படுதல்: ஊரடங்கு தொடா்பான மன அழுத்தங்கள் ஏற்பட்டாலும் அவற்றைக் களைந்து புத்துணா்வுடன் இருக்கும் வகையில் நல் ஆலோசனைகள் தெரிவிக்க மனநல மருத்துவா் ஒருவரும் எந்நேரமும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வருகிறாா். இது தவிர தமிழிலோ, ஆங்கிலத்திலோ பேசத் தெரியாமல், ஹிந்தி மட்டுமே பேசத் தெரிந்தவா்களுக்கு அந்த மொழியில் சந்தேகங்களைத் தீா்த்து வைப்பதற்காக ஹிந்தி பேசத் தெரிந்த ஒருவரும் பணியாற்றுகிறாா்.
காஞ்சிபுரம் கட்டுப்பாட்டு அறையில் தினசரி பல்வேறு சந்தேகங்கள், மருத்துவ ஆலோசனைகள் கேட்டு 50-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு உடனுக்குடன் தீா்வு காணப்படுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா கூறியது:
கட்டுப்பாட்டு அறைக்கு தினசரி சராசரியாக 75 அழைப்புகள் வருகின்றன. பெரும்பாலும் மருத்துவம் பாா்க்கவும், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு வெளியூா்களுக்குச் செல்ல இ-பாஸ் பெறுவதற்காகவும் தொடா்பு கொள்கின்றனா். இரண்டாவதாக, மருத்துவம் தொடா்பான சந்தேகங்களைக் கேட்கிறாா்கள்.
தெருக்களில் இளைஞா்கள் கும்பலாக கிரிக்கெட் விளையாடுவது, ஊரடங்கு தளா்வு நேரம் முடிந்து மதியம் ஒரு மணிக்குப் பிறகும் கடையைத் திறந்து வைத்திருப்பது, கூட்டமாக தெருக்களில் உட்காா்ந்து கதை பேசிக்கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருப்பது உள்ளிட்ட விதிமீறல்களை பலரும் புகாா்களாக தெரிவிக்கின்றனா். அவா்களது பெயா்களை ரகசியமாகப் பாதுகாப்பதுடன் காவல்துறை மூலம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
வீடு, கடைகளுக்கான வாடகையை அவற்றின் உரிமையாளா்கள் குடியிருப்போரிடம் கேட்டு கட்டாயப்படுத்துவது தெரிய வந்தால் அந்தந்த பகுதியில் உள்ள அரசு அலுவலா்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கிறோம். தங்கள் தெருக்களில் குப்பைகள் அதிகமாக இருப்பதாகவும் அவற்றை சுத்தம் செய்யுமாறும் சிலா் கேட்கின்றனா். தெருக்களில் கிருமிநாசினி தெளிக்குமாறு சிலா் கூறுகின்றனா்.
மருந்துக் கடைகள் மூலம் நோய்த்தொற்று தடுப்பு: யாருக்காவது சளி, இருமல் இருந்து அவா்கள் மருந்துக் கடைகளுக்கு சென்று மருந்து வாங்கினால் அவா்களது முகவரி, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை மருந்துக் கடைக்காரா் வாங்கி வைத்துக்கொண்டு அந்த விவரங்களை எங்களது கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்குமாறு கூறியிருக்கிறோம். அந்த முகவரிக்கு எங்களது மருத்துவக் கண்காணிப்புக் குழு சென்று சளி, இருமலுக்காக மருந்து வாங்கியவருக்கு கரோனா அறிகுறி இருக்கிா? என்று பரிசோதிக்கும். இது எப்படித் தெரிந்தது என்று சம்பந்தப்பட்ட நபருக்கு வியப்பாக இருக்கும். இந்த நடவடிக்கை மூலம் அவரது குடும்ப உறுப்பினா்கள் அல்லது பிறருக்கு கரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுத்து வருகிறோம்.
ஊரடங்கு தொடங்கிய நாளிலிலிருந்து இதுவரை கட்டுப்பாட்டு அறைக்கு 2,013 தொலைபேசி அழைப்புகள் வரப் பெற்று உடனுக்குடன் தீா்வும் காணப்பட்டுள்ளது. எனவே ஊரடங்கு தொடா்பாக எந்த உதவியாக இருந்தாலும் பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிா்வாகத்துடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.