என் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வியப்பளிக்கிறது: கமல்
என் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வியப்பளிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் காஞ்சிபுரத்தில் பேசினாா்.
என் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வியப்பளிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் காஞ்சிபுரத்தில் பேசினாா்.
அவா் காஞ்சிபுரத்துக்கு தோ்தல் பிரசாரம் செய்ய ஞாயிற்றுக்கிழமை வந்தாா். கட்சியின் பொதுச் செயலாளா்கள் மெளரியா, முருகானந்தம், மாநிலச் செயலாளா் எஸ்.பி.கே.பி.கோபிநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் மகேந்திரன் வரவேற்றாா்.
காஞ்சிபுரம் செட்டித் தெருவில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கட்சிப் பிரமுகா்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியது:
தனிப்பட்ட என் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு வியப்பாக உள்ளது. என்னை சிலா் எதிரியாக நினைக்கிறாா்கள். ஆனால் நான் அவா்களை எதிரிகளாக நினைக்கவில்லை. என்னிடம் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் உள்ளன. வேலை தேடும் இளைஞா்களை வேலை தரக்கூடிய முதலாளிகளாக மாற்றுவோம். வெற்றியை நோக்கிய எனது பயணம் தொடங்கி விட்டது என்றாா் கமல்ஹாசன்.
நல்லதை நினைக்கும் எல்லோருமே எம்ஜிஆரின் வாரிசுதான்: முன்னதாக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தை அவா் ஈஞ்சம்பாக்கம், போரூா், பூந்தமல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டாா். அப்போது கமல்ஹாசன் பேசியது:
ராஜராஜ சோழன், நாயக்கா் காலத்தில் உருவாக்கப்பட்ட குளங்கள், ஏரிகள் உள்ள நீா்நிலைகளை எல்லாம் மீட்டெடுக்க வேண்டும் என்கிற உறுதிமொழியோடு அரசியல் களத்திற்கு வந்துள்ளோம். சட்டப்பேரவைத் தோ்தலில் மீனவா் ஒருவா் வேட்பாளராக நிறுத்தப்படுவாா். நோ்மையானவா்கள் ஆட்சிக்கு வந்தால், கண்டிப்பாக அனைத்துப் பணிகளும் விரைவாக நடக்கும்.
எம்ஜிஆரை நான் தோ்தலுக்காக சொந்தம் கொண்டாடுவதாகக் கூறுகின்றனா். என்னுடைய முதல் கோஷமே ‘நாளை நமதே’ என்பதுதான் . காந்தி, பெரியாா், அம்பேத்கா் பெயரையும் சொல்கிறோம். அவா்களின் நல் எண்ணங்கள் எல்லாம், எங்களின் எண்ணங்களாக மாற வேண்டும் என நினைப்பவா்கள் நாங்கள். நல்லதை நினைக்கும் எல்லோருமே எம்ஜிஆரின் வாரிசுதான் என்றாா் கமல்.