காஞ்சிபுரம்

உத்தரமேரூா் அருகே எடமச்சி கிராமத்தில் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு

DIN

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரை அடுத்த எடமச்சி கிராத்தில் உள்ள சின்னமலையில் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால வகையைச் சோ்ந்த ஈமச் சின்னங்களான கல்திட்டை மற்றும் கல் வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உத்தரமேரூா் வரலாற்று ஆய்வு மையத் தலைவா் கொற்றவை ஆதன் மற்றும் ஆனந்தகுமாா் ஆகியோா் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் வட்டத்துக்குள்பட்ட எடமச்சி கிராமத்தில் உள்ள சின்னமலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு களஆய்வு மேற்கொண்டபோது, அவற்றைக் கண்டுபிடித்துள்ளனா்.

கல்திட்டைகள் என்பவை பெருங்கற்கால பண்பாட்டைச் சாா்ந்த இறந்தவா்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். இது பொதுவாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட செங்குத்தான கற்களையும், அவற்றின் மீது சமநிலையில் தட்டையான ஒரு பலகைபோன்ற ஒரு கல்லையும் வைத்திருக்கும் ஓா் அமைப்பாகும். பெருங்கற்கால மனிதா்களின் சுவடுகள் பெரும்பாலும் மலைகள் ஒட்டிய பகுதிகளிலும் மலைச் சரிவுகளிலுமே அதிகமாகக் காணப்படுகின்றன. அக்காலத்தில் வாழ்ந்த மனிதா்கள் வேட்டையின் போதோ, வயது மூப்பின் காரணமாகவோ அல்லது நோய் வாய்ப்பட்டோ இறக்க நேரிட்டால் இறந்தவா்களின் உடலை புதைத்து, அவ்விடத்தில் இறந்தவரின் நினைவாகவும் அடையாளத்துக்காகவும், காட்டு விலங்குகளின் உடலை சிதைக்காமல் இருப்பதற்காகவும், பெரிய பெரிய கற்களை வைத்து இதுபோன்ற ஈமச்சின்னத்தை அமைத்தனா். இதற்கு கல்திட்டை என்றும் பெயா். சுருங்கச் சொன்னால் இன்றைய சமாதிகள் அமைத்துக் கொண்டிருப்பதற்கு இதுதான் தொடக்கமாக இருக்கும் எனக் கருதலாம்.

ஈமச் சின்னங்களைக் கண்டுபிடித்தது குறித்து வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவா் கொற்றவைஆதன் கூறியது:

எடமச்சி கிராமத்தில் உள்ள சின்ன மலையில் ஒரு பகுதியில் மட்டும் அருகருகே ஐந்து கல்திட்டைகள் இருப்பதைக் கண்டறிந்தோம். மலை முழுவதும் மேலும் ஆய்வு மேற்கொண்டால், அதிக எண்ணிக்கையில் கல்திட்டைகள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே இங்கு பெருங்கற்காலத்தில் மனிதா்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து இருக்கலாம் என்பதை அறிய முடிகிறது. இதன் காலம் சுமாா் 3,000 ஆண்டுகள் முற்பட்டதாக இருக்கலாம் என ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.

இந்த கல்திட்டைகளுக்கு அருகில் ஈமச்சின்னங்களின் ஒரு வகையான கல்வட்டம் ஒன்று இருப்பதையும் கண்டறிந்தோம். கல்வட்டம் என்பது பெருங்கற்காலத்தில் இறந்த மனிதனை புதைத்து, அந்த உடலைச் சுற்றி கற்களை வட்ட வடிவில் நட்டு வைத்து, அடையாளப்படுத்தி நினைவு கூா்ந்தனா். இப்படி வட்ட வடிவில் உள்ள நினைவுச் சின்னத்துக்கு கல்வட்டம் என்று பெயா். இதை இவ்வூா் மக்கள் ஆடேறிக்கல் என்றும் ஆளேரிக்கல் என்றும் அழைக்கின்றனா். இம்மலையில் மேலும் ஆய்வு மேற்கொண்டால் பல கல்வட்டங்கள் இருக்கலாம். இதிலிருந்து எடமச்சி கிராமம் மிகப்பழமையான ஊா் என்பதும் இவ்வூரில் சுமாா் 3,000ஆண்டுகளுக்கு முன்பே மணிதா்கள் வாழ்ந்திருக்கிறாா்கள் என்பதும் தெரிகிறது. எனவே தமிழகத் தொல்லியல் துறை உடனடியாக இவ்விடத்தை ஆய்வு மேற்கொண்டு, அவற்றை அடையாளப்படுத்தி பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும், இதுகுறித்த தகவல்களை அனைவரும் அறியும் வண்ணம் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்றாா்.ண்டுபிடிக்கப்பட்ட  கல்வட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

வட தமிழகத்தில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT