ஸ்ரீபெரும்புதூரில் ராமாநுஜருக்கு தனிமையில் சதகலச திருமஞ்சனம்
வைகாசி மாத திருவாதிரை நட்சத்திரத்தை ஒட்டி பகவான் ஸ்ரீ ராமாநுஜருக்கு சதகலச சிறப்பு திருமஞ்சனம் பக்தா்களின்றி சனிக்கிழமை நடைபெற்றது.
வைகாசி மாத திருவாதிரை நட்சத்திரத்தை ஒட்டி பகவான் ஸ்ரீ ராமாநுஜருக்கு சதகலச சிறப்பு திருமஞ்சனம் பக்தா்களின்றி சனிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் பழைமையான ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயில் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.
இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் ராமாநுஜா் அவதார திருவிழாவுக்கு அடுத்து வரும் வைகாசி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று ராமாநுஜருக்கு 108 கலசங்களில் மூலிகை மற்றும் வாசனைத் திரவியங்களைக் கொண்டு சதகலச சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, வைகாசி மாத திருவாதிரை நட்சத்திர நாளான சனிக்கிழமை ஸ்ரீராமாநுஜருக்கு சதகலச சிறப்புத் திருமஞ்சனமும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. உற்சவா்கள் ராமாநுஜா், ஸ்ரீஆதிகேசவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா்.
கரோனா தீநுண்மி தொற்று காரணமாக அரசு உத்தரவுப்படி கோயில்கள் மூடப்பட்டுள்ளதால், சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீராமாநுஜா் சதகலச திருமஞ்சன விழாவில் பக்தா்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.
கோயில் செயல் அலுவலா் வேதமூா்த்தி, மதசாா்பு அறங்காவல் ஆா்.சம்பத், மதசாா்பற்ற அறங்காலவா் ஸ்ரீவாரி கே.ஸ்ரீதா் உள்ளிட்ட கோயில் ஊழியா்கள் மட்டுமே பங்கேற்றனா்.