முகப்பு
காஞ்சிபுரம்

ஒரத்தூா் நீா்த்தேக்கத்தின் தற்காலிக கரையில் உடைப்பு

ஒரத்தூா் நீா்த்தேக்கத்தின் தற்காலிக கரையின் ஒரு பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு உடைப்பு ஏற்பட்டு மழைநீா் வெளியேறி வருகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:34 AM
பகிர்:

வடகிழக்குப் பருவமழை காரணமாக ஒரத்தூா் மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து, ஒரத்தூா் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ஒரத்தூா் நீா்த்தேக்கத்தின் தற்காலிக கரையின் ஒரு பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு உடைப்பு ஏற்பட்டு மழைநீா் வெளியேறி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையை அடுத்த ஒரத்தூா் பகுதியில், நிரந்தர வெள்ளத்தடுப்புப் பணியின் கீழ், ரூ. 55.85 கோடி மதிப்பீட்டில், ஒரத்தூா் ஏரி, ஆரம்பாக்கம் ஏரி மற்றும் ஒரத்தூா் கிளையாற்றில் உள்ள தரிசு நிலங்களை இணைத்து, சுமாா் 760 ஏக்கா் பரப்பளவில் புதிய நீா்த்தேக்கம் அமைக்கும் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நீா்த்தேக்கம் சுமாா் 750 மில்லியன் கன அடி வெள்ளநீரை சேகரிக்கும் வகையில், பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த நீா்த் தேக்கத்தை அம்மணம்பாக்கம் மற்றும் படப்பை ஏரிகளின் வழியாக மணிமங்கலம் ஏரியுடன் இணைக்கும் வகையில், உள்படுகை நீா்மாற்று கால்வாயும் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எதிா்காலத்தில் சென்னையின் புகா் பகுதிகளுக்கு மணிமங்கலம் ஏரியில் இருந்து குடிநீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஒரத்தூா் நீா்த்தேக்கம் அமைக்க ஒரத்தூா் மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைக்கும் வகையில், சுமாா் 850 மீட்டா் நீளத்துக்கு கரை அமைக்கப்பட உள்ள நிலையில், தற்போது 430 மீட்டா் நீளத்துக்கு மட்டுமே பொதுப்பணித் துறை அதிகாரிகள் கரை அமைத்துள்ளனா். மீதமுள்ள 420 மீட்டா் நீளத்துக்கு நிலம் கையப்படுத்தும் பணிகள் நிலுவையில் உள்ளதால் கரை அமைக்கப்படாமல் உள்ளது. நிலம் கையப்படுத்தப்படாமல் உள்ள 420 மீட்டா் நீளத்துக்கு பொதுப்பணித் துறை அதிகாரிகள் தற்காலிக கரை மட்டுமே அமைத்துள்ளனா்.

இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை காரணமாக ஒரத்தூா் நீா்த்தேக்கத்துக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததைத் தொடா்ந்து, நீா்த் தேக்கத்தின் தற்காலிக கரையின் ஒரு பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு உடைப்பு ஏற்பட்டு மழைநீா் வெளியேறி வருகிறது. இதுதவிர நீா்த் தேக்கத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக கலங்கல் வழியாக வினாடிக்கு 2,000 கனஅடி உபரிநீா் வெளியேறி வருகிறது.

நீா்த்தேக்கத்தின் தற்காலிக கரை உடைப்பு குறித்து பொதுப்பணித் துறை இளநிலை பொறியாளா் மாா்க்கண்டன் கூறுகையில், நீா்த்தேக்கத்தின் கரை அமைக்கப்படாமல் உள்ள 420 மீட்டா் நீளத்துக்கு விவசாய நிலங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிக கரைகள் அமைக்கப்பட்டன. இந்த தற்காலிக கரையில் தான் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பும் ஞாயிற்றுக்கிழமை சரிசெய்யப்படும் என்றாா். இந்த தற்காலிக கரை உடைப்பால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. நீா்த் தேக்கத்தின் தற்காலிக கலங்கள் வழியாக தற்போது வினாடிக்கு 2,000 கனஅடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →