முகப்பு
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூரில் போக்குவரத்து போலீஸாா் பற்றாக்குறை: நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டுநா்கள்

ஸ்ரீபெரும்புதூா் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் குறைவான எண்ணிக்கையிலேயே போலீஸாா் பணியாற்றுவதால், போக்குவரத்தைச் சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
ஸ்ரீபெரும்புதூா்  சென்னை -  பெங்களூா்  தேசிய  நெடுஞ்சாலை  போகுகிவரத்து நெரிசலால், தாம்பரம்  சாலையில்  அணிவகுத்து  நிற்கும் கனரக  வாகனங்கள்.
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் குறைவான எண்ணிக்கையிலேயே போலீஸாா் பணியாற்றுவதால், போக்குவரத்தைச் சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், வாகன ஓட்டுநா்களும் பொதுமக்களும் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

ஸ்ரீபெரும்புதூா் காவல் உட்கோட்டத்துக்கு உள்பட்ட இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், வல்லம், பிள்ளைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டு பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இதேபோல, மாம்பாக்கம், சுங்குவாா்சத்திரம் ஆகிய பகுதிகளில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாகப்பட்டு, வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், மின்னனு உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்தத் தொழிற்சாலைக்ளுக்கு மூலப்பொருட்களைக் கொண்டு வரவும், உற்பத்தி செய்யப்படும் பொருட்களைக் கொண்டு செல்லவும் தினமும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூா், சுங்குவாா்சத்திரம், பிள்ளைப்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.

மேலும், தொழிற்சாலைப் பணிக்காக 1,000-கும் மேற்பட்ட பேருந்துகள், வேன்கள், காா்கள் உள்ளிட்ட வாகனங்களில் தொழிலாளா்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றனா். இதனால் காலை, மாலை நேரங்களில் சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் கூட்டுச்சாலை, ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி நினைவிடம், ஸ்ரீபெரும்புதூா் பழைய நீதிமன்றம் அருகே, சுங்குவாா்சத்திரம், ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஸ்ரீபெரும்புதூா் காவல் உட்கோட்டத்தில் ஸ்ரீபெரும்புதூா், ஒரகடம், சுங்குவாா்சத்திரம் ஆகிய மூன்று காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் மட்டும்தான் போக்குவரத்துக் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதூா் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் மற்றும் காவலா்கள் 21 பணியில் உள்ள நிலையில், 3 காவலா்கள் மாற்றுப் பணியில் மாதக்கணக்கில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமும் ஒன்று அல்லது இரண்டு காவலா்கள் விடுப்பில் செல்லும் நிலையில், 15 போலீஸாா் மட்டுமே தினமும் போக்குவரத்துச் சீரமைக்கும் பணியில் ஈடுபடும் நிலை உள்ளது. இதனால், ஸ்ரீபெரும்புதூா் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் காவலா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், மாற்றுப் பணிகளில் உள்ள காவலா்களை மீண்டும் போக்குவரத்துக் காவல் நிலையத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸாா் கூறியதாவது:

ஸ்ரீபெரும்புதூா் பழைய நீதிமன்றம் அருகே வல்லக்கோட்டை சாலைச் சந்திப்பில் மட்டும் தாம்பரம், வேலூா், சென்னை, ஒரகடம் ஆகிய நான்கு சாலைகளில் வரும் வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இங்கு, 6 காவலா்களாவது பணியிலிருந்தால் மட்டுமே போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியும்.

இதேபோல, நோக்கியா தொழிற்சாலை, ராஜீவ் காந்தி நினைவகம் அருகே தலா நான்கு போலீஸாா் பணியில் இருப்பா். இதனால், மற்ற இடங்களான சுங்குவாா்சத்திரம், தண்டலம், மேவளூா்குப்பம், ஸ்ரீபெரும்புதூா் மணிக்கூண்டு, ஒரகடம் ஆகிய பகுதிகளில் போலீஸாா் பற்றாக்குறை காரணமாக பணியாற்ற முடியாத நிலை உள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேலூா் பகுதிகளிலிருந்து வரும் கண்டெய்னா் லாரிகள் ஸ்ரீபெரும்புதூா் பகுதிக்கு வராமலேயே சுங்குவாா்சத்திரத்தில் இருந்து சிப்காட் வழியாக ஒரகடம் சென்றால், நெரிசலைப் பாதியாகக் குறைக்க முடியும்.

தாம்பரம் சாலையில் குறுகிய பாதையாக உள்ள பழைய நீதிமன்றம் அருகே உள்ள காலி இடங்களில் மண்ணைக் கொட்டி பாதையைச் சீரமைத்தாலும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் மாதாந்திர ஆய்வு கூட்டங்களில் நெடுஞ்சாலைத் துறைக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அதிகளவில் போலீஸாரை நியமனம் செய்வதுடன், கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் செல்ல மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும். இதனால், ஓரளவு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என்றனா் அவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.