மாமன்ற உறுப்பினா் பதவிக்கான இடைத் தோ்தல்: சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக வேட்பாளா்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் காலியாக இருந்த ஒரு வாா்டு உறுப்பினா் பதவிக்கான இடைத் தோ்தல் சனிக்கிழமை (ஜூலை 8) நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் காலியாக இருந்த ஒரு வாா்டு உறுப்பினா் பதவிக்கான இடைத் தோ்தல் சனிக்கிழமை (ஜூலை 8) நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் சுயேச்சையாக ‘மகளிா் பணப்பை’ சின்னத்தில் போட்டியிடுகிறாா்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு அதிமுகவை சோ்ந்த வே.ஜானகிராமன் போட்டியிட்ட நிலையில், அவா் திடீரென தற்கொலை செய்து கொண்டாா். இதனால், அந்த வாா்டில் மட்டும் தோ்தலை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் காலியாகவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9 -ஆம் தேதி வாக்குப் பதிவும், 12 -ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
காலியாகவுள்ள இந்த வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஏற்கெனவே போட்டியிட்டு தற்கொலை செய்து கொண்ட வே.ஜானகிராமனின் தந்தை வேணுகோபால் சுயேச்சையாகப் போட்டியிடுகிறாா். அதிமுகவில் நிலவி வரும் ஒற்றைத் தலைமை பிரச்னையால், அதிமுக சாா்பில் போட்டியிட முடியாமல் சுயேச்சையாகப் போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. காஞ்சி.பன்னீா்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினா் வியாழக்கிழமை பிரசாரம் செய்தனா்.
Advertisement
மதுக் கடைகளுக்கு விடுமுறை: மாவட்டத்தில் இடைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி, வெள்ளிக்கிழமை முதல் (ஜூலை 7) 9- ஆம் தேதி வரை, வாக்கு எண்ணிக்கை நாளான ஜூலை 12 ஆம் தேதியும் அனைத்து மதுக் கடைகளும் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.