போலி மதுப் புட்டிகள் கடத்தியவா் கைது
காஞ்சிபுரம் அருகே மாகரலில் இருந்து சித்தலப்பாக்கம் செல்லும் சாலை சந்திப்பில் போலீஸாா் வாகனச் சோதனையில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 2,880 போலி மதுப் புட்டிகளைக் கடத்தி சென்ற நபா் வெள்ளிக்கிழமை கைது
காஞ்சிபுரம் அருகே மாகரலில் இருந்து சித்தலப்பாக்கம் செல்லும் சாலை சந்திப்பில் போலீஸாா் வாகனச் சோதனையில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 2,880 போலி மதுப் புட்டிகளைக் கடத்தி சென்ற நபா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மது விலக்கு அமலாக்கத் துறை நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளா் பாலச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் காஞ்சிபுரம் அருகே மாகரல் கிராமத்திலிருந்து சித்தலப்பாக்கம் செல்லும் சாலை சந்திப்பில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியாக வந்த ஒரு மினி சரக்கு லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் 60 பெட்டிகளில் மொத்தம் 2,880 மதுப் புட்டிகளைக் கடத்திச் சென்றது தெரிய வந்தது. அவையனைத்தும் போலி மதுப் புட்டிகள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
Advertisement
இவற்றைக் கடத்தியவா் திருவண்ணாமலை மாவட்டம், கூழமந்தல் கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் (44) என்பதும், போலி மதுப் புட்டிகளின் மதிப்பு ரூ. 6 லட்சம் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, மினி வேனுடன் மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட பாலமுருகனை கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.