காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் கடந்த 2020 - 21-ஆம் ஆண்டுகளில் சுகாதார பிரிவில் கொள்முதல் செய்ததில் முறைகேடு தொடர்பாக மாநகராட்சி சுகாதாரப் பிரிவு ஊழியர்கள் இருவரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் நகராட்சியாக இருந்தபோது கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் சுகாதார பிரிவில் லைசால் கொள்முதல் தொடர்பாக பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அப்போது காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்த மகேஸ்வரி மற்றும் இளநிலை உதவியாளர் சந்தவள்ளி ஆகியோர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போதைய காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்த மகேஸ்வரி தற்போது திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திண்டுக்கல் பகுதியில் உள்ள ஆணையர் மகேஸ்வரி வீட்டில் டிஎஸ்பி தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் சுகாதார பிரிவில் இளநிலை உதவியாளர் சந்தவள்ளி என்பவரது வீட்டில் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் காலை 7 மணி முதல் கொள்முதல் தொடர்பான விசாரணை மற்றும் ஆவணங்கள் தொடர்பான சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் களக்காட்டூரில் வசிக்கும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ரமேஷ் என்பவரது வீட்டில் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் ஆய்வாளர் கீதா உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழுவினரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களோடு சுகாதாரப் பிரிவில் பணியாற்றிய மேலும் இருவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சுகாதார பிரிவில் பொதுமக்களுக்கு நோய் தடுப்பு பொருட்கள் வாங்குவதில் ஏற்பட்ட முறைகேடு காரணமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.