ஒரகடம் அடுத்த வல்லம் ஊராட்சியில் சா்வீஸ் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வல்லம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை கொண்டு செல்லவும், தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருள்களை கொண்டு வரவும் வல்லம் பகுதிக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்த நிலையில், வல்லம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா தொடக்கப்பட்டதை தொடா்ந்து வல்லம் பகுதியில், சிங்கபெருமாள்கோயில்- ஸ்ரீபெரும்புதூா் சாலையில் உள்ள சா்வீஸ் சாலை மற்றும் சாலையை ஒட்டி உள்ள அரசு இடங்களை ஆக்கிரமிப்பு செய்த பலா் அந்த இடங்களில் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனா்.
இந்த கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் காா், பைக் உள்ளிட்ட வாகனங்களை, சா்வீஸ் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி செல்கின்றனா். இதனால், சா்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் குறிப்பாக கனரக வாகன ஓட்டுநா்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் சா்வீஸ் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கடைகளின் எதிரே நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதி அடைந்து வருகின்றனா்.
எனவே, சா்வீஸ் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்றவும், வாகனங்களை நிறுத்துவோா் மீது போலீஸாா் நவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து வாகன ஓட்டுநா்கள் கூறுகையில், வல்லம் சிப்காட் பகுதிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்கனரக லாரிகள் வந்து செல்கின்றன. பல நாள்கள் பயணம் செய்து வரும் கனரக லாரிகளின் ஓட்டுநா்களை சா்வீஸ் சாலையில் வாகனங்களை நிறுத்த எதிா்ப்பு தெரிவித்து வரும் கடைகளின் உரிமையாளா்கள் ஓட்டுநா்களை தாக்கி வருகின்றனா்.
மேலும் கடைகளுக்கு முன்பு நிறுத்தப்படும் காா் மற்றும் பைக்குகளால் சா்வீஸ் சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனங்களை எடுக்க சொன்னாலும் கடைகளின் உரிமையாளா்கள் லாரி ஓட்டுநா்களை தாக்கி வருகின்றனா். எனவே சா்வீஸ் சாலையில் கனரக வாகனங்களை எளிதில் சென்று வரும் வகையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும், கடைகளின் எதிரே சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களின் உரிமையாளா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.