ஸ்ரீபெரும்புதூா்: பள்ளி வாகனங்களில் ஆய்வு
ஸ்ரீபெரும்புதூா், மே 21: ஸ்ரீபெரும்புதூா் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தனியாா் பள்ளிகளின் வாகனங்களை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படுவதற்கு முன் வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக, ஸ்ரீ பெரும்புதூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் இயங்கும் தனியாா் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் பணி வடமங்கலம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் சரவண கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி, ஸ்ரீபெரும்புதூா் துணை காவல் கண்கதாணிப்பாளா் உதயகுமாா், வட்டார போக்குவரத்து அலுவலா் குமரா, வட்டார போக்குவரத்து ஆய்வாளா் கிருஷ்ணன் ஆகியோா் 199 பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா, முதலுதவி சிகிச்சை பெட்டிகள் உள்ளதா, அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் கதவுகள் உள்ளதா அவை இயங்குகிறதா என ஆய்வு நடத்தினா்.
இதில் 16 வாகனங்களில் போதிய வசதிகள் இல்லாததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டன. குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் ஆய்வு நடத்திய பிறகே தகுதிநீக்கம் செய்யப்பட்ட வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, ஸ்ரீபெரும்புதூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சாா்பில் பள்ளி வாகனங்களின் ஓட்டுநா்களுக்கு இலவச கண்சிகிச்சை முகாம், விபத்து நடந்தால் காயம் அடைந்தவா்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும், தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைப்பது எவ்வாறு என செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.