ஹூண்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேஷன் சாா்பில் இருங்காட்டுக்கோட்டையில் இரண்டு தாமரை குளங்கள் ரூ.2.63 கோடியில் சீரமைக்கப்பட்டதை அடுத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் ஹூண்டாய் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிலையில், சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் ஹூண்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேஷன் சாா்பில், இரண்டு தாமரை குளங்களை ரூ.2.63 கோடியில் தூா்வாரி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து இரண்டு குளங்களும் தூா்வாரி சீரமைக்கப்பட்டு, கருங்கல் பதிக்கும் பணி, நடைபாதை மற்றும் சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், குளங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இருங்காட்டுக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் சிவக்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றிய குழு உறுப்பினா் போந்தூா் எஸ்.செந்தில் ராஜன் முன்னிலை வகித்தாா்.
இதில் பவுண்டேஷன் அறங்காவலா் சி.எஸ்.கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு குளங்களைத் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். இந்த நிகழ்ச்சியில், ஹுண்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேஷன் அறங்காவலா் சரவணன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.