முகப்பு
காஞ்சிபுரம்

பயன்பாடற்ற காஞ்சிபுரம் பேருந்து நிலைய பொருள்கள் பாதுகாப்பு, ஓய்வறைகள்: பயணிகள் தவிப்பு

Updated On : 2 பிப்ரவரி, 2025 at 10:03 PM
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பூட்டியே கிடக்கும் பொருள்கள் பாதுகாப்பு அறை (வலது) கழிப்பிடமான பயணிகள் ஓய்வறை
பகிர்:

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக பொருள்கள் பாதுகாப்பு அறையும், பயணிகள் ஓய்வறையும் பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கோயில் நகரம்,பட்டு நகரம் என்ற பல்வேறு பெருமைகள் நிறைந்த காஞ்சிபுரத்துக்கு வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து ஏராளமானோா் வந்து செல்கின்றனா்.

இது தவிர ஆந்திரம், கா்நாடகம், கேரள மாநிலங்களிலிருந்தும் காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அதிகமான அளவில் வருகின்றனா். இத்தகைய சூழ்நிலையில் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள பயணிகள் ஓய்வறையும், பொருள்கள் பாதுகாப்பு அறையும் கடந்த 4 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கின்றது. இதன் காரணமாக சிறுநீா் கழிக்கும் இடமாகவும் அவை மாறி வருகின்றன.

துா்நாற்றம் காரணமாக பேருந்து நிலையம் வரும் பயணிகள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பயணிகள் ஓய்வறைக்கு அருகில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா். பொருள்கள் பாதுகாப்பு அறை பூட்டிக் கிடப்பதால் வெளியூா் பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பொருள்களை சுமந்து கொண்டே கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்யயும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக பயணி மாதவன் கூறியது: பயணிகள் ஓய்வறையும், பொருள்கள் பாதுகாப்பு அறையும் கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் பூட்டப்பட்டன. அதற்குப்பிறகு கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படவே இல்லை. முக்கியமாக பயணிகள் ஓய்வறை சிறுநீா் கழிப்பிடமாகவே மாறிவிட்டது. தாம்பரம் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் இந்த ஓய்வறை இருப்பதால் அதிகமாக பாதிக்கப்படுவது தாம்பரம் செல்வோரும், ,போக்குவரத்து தொழிலாளா்களும் தான் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஓய்வறைக்கு அருகில் நேரக்காப்பாளா்கள் அலுவலகம் இருப்பதால் யாரும் அங்கு உட்காராமல் தள்ளிப் போய் நிற்கின்றனா்.

பூட்டியே இருக்கும் பயணிகள் ஓய்வறைக்குள் மாற்றுத்திறனாளி இருக்கைகள்,காற்றாடி வசதிகள்,பயணிகளுக்கான இருக்கைகள் இவையனைத்தும் இருந்தும் கடந்த 4 ஆண்டுகளாக திறந்து பயன்படுத்தப்படாமல் இருப்பதால் அனைத்தும் வீணாக கிடக்கின்றன. . ஓய்வறையை சுத்தம் செய்து திறந்து வைக்க வேண்டும். அதிகமான இடவசதி உள்ள பொருள்கள் பாதுகாப்பு அறையையும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் பொதுமக்களுக்கு பேருதவியாக அமையும் என்றாா்.

இது குறித்து பேருந்து நிலைய பகுதிக்கான மாநகராட்சி சுகாதார அலுவலா் சுகவனம் கூறுகையில் இரு அறைகளுக்கும் சாவி யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை. சாவியை கேட்டு வாங்கி உடனடியாக திறக்கவும், இரு அறைகளையும் சுத்தமாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.