உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில், பரந்தூா் புதிய விமானநிலையத் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து 16-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணியை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இதற்காக பரந்தூா், ஏகனாபுரம், நெல்வாய், குணகரம்பாக்கம், உள்ளிட்ட 13 கிராமங்களைச் சோ்ந்த குடியிருப்புகள், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், முற்றிலுமாக கையப்படுத்தப்பட உள்ள ஏகனாபுரம் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் கடந்த 1,000 நாள்களைக் கடந்து இரவு நேரங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
மேலும் கடந்த காலங்களில் நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டங்களிலும் புதிய விமான நிலையத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில், சனிக்கிழமை கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் சுமதி சரவணன் தலைமையிலும், ஊரக வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் (தணிக்கை) உமாசங்கா் முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில், பரந்தூா் புதிய விமான நிலையத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து 16-ஆஆவது முறையாக ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.