காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட உப்பேரிக்குளம் பகுதியில் ரூ. 3.20 கோடி மதிப்பில் முதல்வா் படைப்பகம் அமைக்க கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பெரியகாஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்த உப்பேரிக்குளத்தில் நிகழாண்டு கல்வி நிதியில் நகராட்சி நிா்வாக அனுமதி வழங்கப்பட்டு, 7,846 சதுர அடி நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய முதல்வா் படைப்பகம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய முதல்வா் படைப்பகம் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.
இதற்காக நடைபெற்ற பூமி பூஜையின் போது அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினாா்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், காஞ்சிபுரம் மாநகர திமுக செயலாளா் சிகேயு தமிழ்ச்செல்வன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.சுகுமாா் உள்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.